நடிகர் பிரபாஸ், க்ருத்தி சானோன் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெறும் சர்ச்சைக்கு உள்ளாகியது. இதைத் தொடர்ந்து சர்வ பிராமண மகாசபை இயக்குனர் ஓம் ராவத்திற்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் சிலவற்றை ஏழு நாட்களுக்குள் நீக்கவில்லை எனில் சட்டபூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளனர். 






சர்வ பிராமண மகாசபையின் தேசிய தலைவர் பண்டிட் சுரேஷ் மிஸ்ராவின் சார்பில் வழக்கறிஞர் கமலேஷ் சர்மா இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில் இந்துமத கடவுள்கள் தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்து மத கடவுள்கள் தோலாலான உடையை அணிந்து இருக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் அவர்களின் மொழி மிகவும் அநாகரிகமானதாகவும் உள்ளது. இந்த செயல் இந்து மதவாதிகளின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.






மேலும் ராமாயணம் என்பது வரலாறு! ஆதிபுருஷ் திரைப்படத்தில் அனுமன் ஒரு முகலாயராக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனுமன் மீசை இல்லாமல் தாடி மற்றும் வைத்துள்ளவாறு காட்டப்படுகிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராமாயணத்தையும் ராமன், சீதை, அனுமன் அனைவரையும் இஸ்லாமியராக சித்தரிக்கப்பட்ட திரைப்படம் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ராவணனாக நடித்திருக்கும் சயீஃப் அலிகான் முகலாய அரசர்களான தைமூர் மற்றும் கில்ஜி போன்று காட்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட மதத்தின் நம்பிக்கைகளை இத்திரைப்படம் கொச்சைப்படுத்துவதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.






இணையம் முழுவதும் வைரல் ஆகியுள்ள இந்த படத்தின் புகைப்படங்கள் நம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிப்பதாக இருப்பதாகவும்,  கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்று குறிப்பிட்டு அந்த நோட்டீஸை இயக்குநருக்கு அனுப்பி உள்ளனர். மேலும் மக்களின் நம்பிக்கைகளை உடைக்க வேண்டாம். ஆகவே படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை ஏழு நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், இவ்வாறு செய்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்த நோட்டீஸ் மூலம் தெரிவித்துள்ளனர்.