தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சிம்புதேவன். நடிகர் வடிவேலுவை வைத்த இவர் முதன்முதலில் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதன்மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையிலான படங்களை எடுப்பதில் வல்லவரான இவர் அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார்.


போட்:


இவர் 2015ம் ஆண்டு விஜய்யை வைத்து இயக்கிய புலி படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதன்பின்பு எந்த படத்தையும் இயக்காத சிம்புதேவன் இடையில் கசட தபற என்ற ஆந்தாலஜியையும், விக்டிம் என்ற வெப்சீரிசையும் இயக்கினார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அவர் போட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.


தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள போட் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் வங்கக்கடலில் படகில் சிக்கிக்கொண்ட 10 நபர்களும், அப்போது படகில் விரிசல் விழுவதால் யாரேனும் 3 பேர் தண்ணீரில் குதிக்க வேண்டும் என்ற கதையை நகைச்சுவை கலந்த விறுவிறுப்புடன் சிம்புதேவன் அளித்துள்ளார் என்பதையே டீசர் காட்டுகிறது.


மிகுந்த எதிர்பார்ப்பு


ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தில் யோகிபாபுவுடன் 96 பட புகழ் கௌரி, சின்னி ஜெயந்த், மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமாறன் எடிட்டிங் செய்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு சிம்புதேவன் இயக்கியுள்ள படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் கம்பேக் வெற்றியை சிம்புதேவன் தருவாரா? யோகிபாபுவுக்கு மற்றொரு காமெடி ப்ளாக்பஸ்டராக இந்த படம் அமையுமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.