நடிகர்கள் என்றாலே வாய்ப்புகள் எளிமையாக கிடைத்துவிடுவதில்லை. அதற்காக பல காலம் போராட வேண்டும். ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்த நடிகர்கள் பலரும் இன்று மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டனர். அந்த வரிசையில் நடிகர் யோகி பாபு தவிர்க்க முடியாத நடிகர். யோகி பாபு இன்றைக்கு அஜித் , விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


யோகிபாபு அதிக கவனம்பெற தொடங்கிய காலக்கட்டத்தில் , அவருக்கு நடிகர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக இருந்திருக்கிறது. வீரம் திரைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தில் , யோகிபாபு இயக்குநருக்கு ஒரு கோரிக்கை வைத்தாராம். எவ்வளவு சிறிய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை. அஜித் சாருடன் நடிக்க வையுங்க என்றாராம். படம் பேக்கப் செய்வதற்கு முதல் நாள் யோகிபாபுவை அழைத்த இயக்குநர், இது போல சாப்பாடு போட்டு , கட்டி வைத்து அடிக்கும் காட்சி ஒன்று உள்ளது அதில் நடிக்கிறீர்களா என கேட்டாராம். 




உடனே  யோகிபாபு “ அவரு என்னை சாப்பாடு போடாமல் அடித்தாலும் பரவாயில்லை..நான் வர்றேன் தலைவரே” என விரைந்திருக்கிறார் யோகிபாபு. முதல் முறை அஜித்தை நேரில் பார்க்கும் பொழுது அவர் சக கலைஞர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாராம். முதலில் இயக்குநரை சந்தித்துவிட்டு , அவர் பேசிக்கொண்டிருந்த குழுவின் அருகே சென்றாராம் யோகிபாபு. அப்போது யோகிபாபுவை கண்டவர்கள் அவரை சேரில் அமரும் படி கேட்டிருக்கின்றனர். ஆனால் அஜித் முன்னால் உட்கார தயங்கினாராம் யோகி பாபு. சற்று நேரம் கழித்து ” சேர் உட்காருவதற்குதானே...உட்காருங்கள் “ என்றாராம் அஜித். உடனே வேகமாக அமர்ந்தேன் என பூரிப்பாக கூறுகிறார் யோகிபாபு.


வீரம் படத்தில் அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அஜித், யோகி பாபுவை கட்டிப்பிடித்துக்கொண்டாராம் .அவரின் அரவணைப்பு கரண்ட் ஏறியது போல ஈர்ப்பாக இருந்தது என யோகிபாபு தெரிவிக்கிறார். அதன் பிறகு அவருடன் வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் வந்ததாம்.



 


அஜித் , விஜய் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளின் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது  ஆசை. விஜய் சார் நடிப்பில் உருவான தெறி படத்தில் வில்லனுக்கு உதவியாளராக நடித்தாராம் யோகிபாபு. காட்சி ஒன்றில் நடித்து முடித்த பிறகு அஜித்தை போலவே விஜய்யும் யோகிபாபுவை கட்டிப்பிடித்தாராம்.  மிகப்பெரிய அளவில் அந்த காட்சி திரையரங்கில் வரவேற்பை பெறும் என நினைத்தாராம் யோகிபாபு. ஆனால் அது படம் வெளியாகும் போது சில காரணங்களால் அந்த காட்சிகளை நீக்கிவிட்டார்கள் என்கிறார் யோகிபாபு.


மீண்டும் அட்லி விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறுகிறார் யோகிபாபு.  விஜய்யை பொறுத்தவரை அவர் செட்டில் அமைதியாகத்தான் இருப்பாராம். ஆனால் மற்றவர்களின் நடிப்பையும் ரசிப்பாராம். யோகிபாபுவின் நடிப்பை கூர்ந்து கவனித்த விஜய் ,டேக்கின்போதே சிரித்துவிட்டாராம்.