தமிழ் திரையுலகில் காமெடியனாக இருந்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் நடிகர் யோகி பாபு. அவரின் நடிப்பில்  வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது.  அந்த வகையில் அவர் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கஜானா'. போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கீழ் பிரபாதிஸ் சாம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபுவுடன் மொட்டை ராஜேந்திரன், சென்றாயன், வேதிகா, இனிகோ பிரபாகரன், சாந்தினி, பிரதாப் போத்தன், விஜி மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  கோபி துரைசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரியாஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 


 



ஒரு மர்மமான காட்டுக்குள் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பேரரசர்  ஒருவரால்  புதைக்கப்பட்ட கஜானாவை தேடி சிலர் காட்டுக்குள் பயணிக்கின்றனர். அந்த மர்மமான காட்டுக்குள் ஆபத்தான வனவிலங்குகள், பேய், வித்தியாசமான திகில் நிறைந்த சம்பவங்கள் நிகழ்வதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். எந்த மாதிரியான மர்மங்கள் காட்டுக்குள் புதைந்து கிடக்கின்றன, அங்கிருந்து கஜானாவை தேடி கண்டுபிடிக்கிறார்களா இல்லையா என்பது தான் படத்தின் கதைக்களம். கோடை விடுமுறையில் வெளியாக இருக்கும் இந்த காமெடி கலந்த மர்மமான  படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 


 



வெளிநாட்டு திரைப்படங்களுக்கு இணையாக VFX காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கம் , புலி, யானை, பாம்பு என பயங்கரமான  விலங்குகளின் பிரமிக்க வைக்கும் சாகச காட்சிகள் நிறைந்த இப்படத்தில் பல வியப்பூட்டும் விஷயங்கள் உள்ளன. இதுவரையில் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த யாளி விலங்கை காட்சிப்படுத்தியுள்ளனர். 


அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி, யானை மற்றும் சிங்கத்தின் உருவம் இணைந்தது போல காட்சியளிக்கும் என்பதை தென்னிந்தியாவையும் தாண்டி இலங்கை போன்ற பிற நாட்டு கோவில்களில் இடம்பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இந்த விலங்குகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருக்க கூடும் என கருதப்படுகிறது. இதுவரையில் எந்த ஒரு திரைப்படத்திலும் காட்சி படுத்தப்படாத யாளி விலங்கு 'கஜானா' படத்தில் இடம் பெற்று இருப்பது இதன் சிறப்பம்சம். 



சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் VFX பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. யாளி விலங்கின் வடிவத்தை வடிவமைக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளது படக்குழு. இந்த ஃபேண்டஸி அட்வென்ச்சர் திரைப்படத்தை நிச்சயம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மே மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. 


கஜானா படத்தை தெடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.