அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கிவரும் படத்தில் கவுனுடன் நடிகர் பிரபு இணைந்துள்ளார்.
கவின்
விஜய் டிவியில் ஒளிபரபரப்பான ’கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சியில் நடித்து பரவலான கவனம் ஈர்த்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பின் அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. வினீத் வரபிரசாத் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான லிஃப்ட் படத்தில் கதாநாயகனாக நடித்தார் கவின். கவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் இந்தப் படம் பெரியளவில் கவனிக்கப் படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு கணேஷ்.கே.பாபு இயக்கத்தில் வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்தடுத்தப் படங்களில் பிஸி
தற்போது கவின் பல படங்களில் நடித்து வருகிறார். பியார் பிரேம காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவினின் அப்பாவாக லால் , நாயகியாக அதிதி பொஹங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஸ்டார் படம் தவிர்த்து கவின் நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார். நெல்சன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அடுத்தபடியாக வெற்றிமாறனின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவின் படத்தில் பிரபு
தற்போது கவின் தனது 5 ஆவது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சதீஷ் இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்னும் ஒரு பாடல் மட்டும் மீதமிருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது இப்படத்தில் நடிகர் பிரபு கவினுடன் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கவின் மற்றும் பிரபு இணைந்து இருக்கு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ப்ரித்தி அஸ்ரானி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் நிலையில் அனிருத் இசையமைத்து வருகிறார். ரோமியோ பிக்க்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது