ஆளுங்கட்சி எம்.பி எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நெல்லையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 


திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த ஞான திரவியமும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அப்துல் வகாப்பும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது குலவணிகர்புரம். இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அடிக்கடி விழும் ரயில்வே கேட்டால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர். மேலும் அங்குள்ள ரயில்வே பாதையை கடக்க ஒய் வடிவில் பாலம் அமைக்கப்பட வேண்டுமென்பது அங்குள்ள மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. 


அதே போல ஒரு நாளைக்கு 16 முறை இந்த வழித்தடத்தில் ரயில் சென்று வருவதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடி திறக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். திருநெல்வேலி நகர் பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லவும், வலது புறமாக திரும்பினால் அம்பாசமுத்திரம் செல்லவும் பாதை இருக்கும் நிலையில் அமைக்கப்படக்கூடிய மேம்பாலம் ஓய் வடிவில் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை மேம்பால பணிகள் துவங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது வழக்குகள் முடிவடைந்த நிலையிலும் பாலப் பணிகள் தொடங்கப்படாமலேயே உள்ளது. தற்போது அம்பாசமுத்திரம் செல்வதற்கான சாலை திருப்பத்தில் தடுப்புகள் அமைக்கப்படுவதால் பொதுமக்கள் மூன்று கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் நெல்லை மாநகரான மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் துரோகம் செய்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே  தொகுதிக்குள் நுழையாதீர்!  நெல்லை தொகுதி எம்பி ஞான திரவியம் அவர்களே! பாளை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் வகாப் அவர்களே! குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்தை Y வடிவில் அமைக்காமல் மேலப்பாளையம், அம்பை பகுதி மக்களுக்கு செய்த துரோகத்தை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன் சரி செய்யாமல் தேர்தலுக்காக வாக்கு கேட்டு தொகுதிக்குள் நுழையாதீர்கள். மீறி நுழைந்தால் மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் அக்கட்சியின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகவும்,  வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  வாக்கு கேட்டு தங்கள் பகுதிக்குள் வர வேண்டாம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.