‘தளபதி 67’ படத்தில் நடிகர் விஜயுடன் யோகிபாபு நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. 


நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால்  ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது.






பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில் இந்தப்படத்தில் நடிகைகள் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. லோகேஷிற்கு மிகவும் பிடித்தமான நடிகர்  மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.


மேலும் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக  ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிறார்.






அண்மையில் ஜில் ஜங் ஜக்  படத்தின் இயக்குநர்  தீரஜ் வைத்தி  லோகேஷ் மற்றும் ரத்னகுமாருடன் இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்தார். இதன் மூலம் இந்தக்கூட்டணியில் அவரும் இணைகிறார் என்ற தகவலும் திரைவட்டாரத்தில் பேசப்பட்டன. இந்த நிலையில் இந்தப்படத்தில் தற்போது நடிகர் யோகிபாபுவும் இணைய இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. 


அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய யோகிபாபு, சமீபத்தில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தில் தன்னை நடிக்க கேட்டதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜயுடன் யோகிபாபு 6 ஆவது முறையாக இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.