கூகுள் லோகோ ‘க்ரே’ (சாம்பல்) வண்ணத்தில் க்ளிக் செய்யமுடியாதபடி தோற்றமளிப்பது இணையவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


அன்றாட வாழ்வில் நம் அனைவராலும் தவிர்க்கமுடியாத கூகுள் சர்ச் என்ஜினின் லோகோவும் டூடுல்களும் நம் கவனத்தை  நாள்தோறும் ஈர்க்கக்கூடியவை. பொதுவாக வரலாற்றின் முக்கிய நபர்கள், முக்கிய தினங்கள், வரலாற்று கண்டுபிடிப்புகளை நினைவுகூறும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் டூடுல்களை மாற்றியமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.


அந்த வகையில், கடந்த செப்.08 இரவு உயிரிழந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தன் லோகோவை ‘க்ரே’ வண்ணத்துக்கும் க்ளிக் செய்ய முடியாதபடியும் கூகுள் மாற்றியமைத்துள்ளது.


 






”மகாராணி எலிசபெத், அவர் ஆட்சி செய்த இத்தனை ஆண்டுகளில் ஏற்பட்ட  பல மாற்றங்களுக்கும் மத்தியில், உறுதியுடன் ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்கியதாக செய்தித்தாள்கள் வர்ணிக்கின்றன. அவருக்கு
உலகம் முழுவதுமிருந்து வரும் எண்ணற்ற அஞ்சலிகளில் இதுவும் ஒன்று” என இதுகுறித்து முன்னதாக கூகுளின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


முன்னதாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தப்படும் மெமோரியல் நாளில் கூகுள் இதேபோல் ‘க்ரே’ வண்ண லோகோவை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பிரிட்டன் மகாராணியாக சுமார் 70 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர் இரண்டாம் எலிசபெத். பிரிட்டனில் 63 ஆண்டு காலம் ஆண்டிருந்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருக்கிறார் ராணி இரண்டாம் எலிசபெத்.


 






54 காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் இருந்து அவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கை எப்படி நடத்த வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது போலவே  அனைத்தும் நடத்தப்படுகிறது. அதன் முதற்கட்டமாக முன்னதாக மன்னராக அவரது மகன் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.