இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மற்றொரு சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.


அடுத்த சர்வேதத் திரைப்பட விழா


ராம் இயக்கத்தில் நிவின் பாலி - அஞ்சலி ஆகி்யோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இப்படத்தினைத் தயாரித்துள்ளார்.


இயக்குநர் ராமின் வழக்கமான பாணியில் பேரன்பை கதைக்களமாகக் கொண்டு முன்னதாக வெளியான இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூரி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


முன்னதாக சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்ற 53ஆவது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' இப்படம் தேர்வாகி இருந்தது. இந்த விழாவில் திரையிடப்பட்டு இப்படம் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் தற்போது ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் தற்போது மற்றொரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.


தயாரிப்பாளர் மகிழ்ச்சி


இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ஏழு கடல் ஏழு மலை, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவில் பெரும் வரவேற்பையும், முத்திரையும் பதித்த 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம், உலக அரங்கில் தனது பயணத்தை உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் தொடர்கிறது. தற்போது 46ஆவது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியிருப்பதை சினிமா ரசிகர்களுக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.


ஏப்ரல் 19 முதல் 26 வரை நடைபெறவுள்ள மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் 'பிளாக்பஸ்டர்ஸ் ஃப்ரம் அரௌண்ட் தி வேர்ல்ட் (Blockbusters from around the World) பிரிவில் ஏழு கடல் ஏழு மலை திரையிடப்பட இருக்கிறது. சமகால சினிமாவின் சிறந்த உலகத் திரைப்படங்களின் வரிசையில் ‘ஏழு கடல் ஏழு மலை' திரைப்படம் தேர்வாகியிருப்பது இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமைக்கும் கடின உழைப்பிற்குமான சான்றாகும்.


எனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிரு இயக்குநர் ராமின் படைப்பான 'ஏழு கடல் ஏழு மலை', அதன் அழுத்தமான திரைக்கதை மற்றும் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்பினால் பார்வையாளர்களின் உள்ளங்களைக் கவர்ந்துள்ளது.


நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் அசாதரணமான நடிப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், கலை இயக்குநரான உமேஷ் குமாரின் உழைப்பும், மதன் கார்க்கியின் பாடல் வரிகளும், சில்வாவின் அபரிமிதமான உழைப்பும் உலகளாவிய பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


தமிழ் புத்தாண்டில் இச்செய்தியை அனைவரிடமும் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.