தமிழ் சினிமாவுக்கு 2023-ஆம் ஆண்டு ஒரு மிக நல்ல ஆண்டாகவே இருந்தது. ஏராளமான வெற்றி படங்கள், பிளாக் பஸ்டர், ஸ்டார் நடிகர்களின் அடுத்தடுத்த ரிலீஸ் என இந்த ஆண்டு திரை ரசிகர்களுக்கு களைகட்டியது. இருப்பினும் ஒரு சில படங்கள் பெரிய அளவில் தோல்வியை சந்தித்து இந்த ஆண்டின் ஃப்ளாப் படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
வெளியாகும் அனைத்து படங்களுமே ஹிட் அடித்து விடும் என எதிர்பார்ப்பது நியாயமில்லை. ஆனால் ஸ்டார் நட்சத்திரங்களின் படங்கள் பெரிய அளவில் அடிவாங்கியது என்றால் அதற்கு காரணம் திரைக்கதையின் தரம் மற்றும் இயக்குநர்கள் அதை கையாண்ட தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி தமிழ் சினிமாவின் அடையாள நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர்களை வேகவேகமாக இயக்குகிறேன் என மிக பெரிய ஃப்ளாப் படங்களை கொடுத்த இயக்குநர்கள் யார் யார் என்பதை பற்றி பார்க்கலாமா?
பி.வாசு :
2005ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா நடிப்பில் சரியான வசூல் வேட்டையை செய்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஓடி வெற்றிவாகை சூடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிட்டு இருந்தார் இயக்குநர் பி. வாசு. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு என மிக பெரிய திரை பட்டாளத்தை வைத்து 'சந்திரமுகி 2' படத்தை கடந்த 3 ஆண்டுகளாக எடுத்து கடைசியில் இந்த ஆண்டு தான் வெளியிட்டார். 'சந்திரமுகி 2' திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற தவறியது.
ராஜூ முருகன்:
தமிழ் சினிமாவின் ஸ்மார்ட் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்ற மைல்கல்லை சுத்தமாக வேஸ்ட் செய்து விட்டார் அப்படத்தை இயக்கிய ராஜு முருகன். ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் அறியப்பட்ட இயக்குநர் ராஜு முருகன், 'ஜப்பான்' படத்தின் கதையை சுத்தமாக சொதப்பிவிட்டார். படம் தொடங்கியதுமே ஹீரோவுக்கு எய்ட்ஸ் என சொன்னால் அவரின் ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்ன? மொத்தத்தில் படம் தோல்வியை சந்தித்தது.
அகமத்:
சைக்கோ ஜானரில் 'இறைவன்' படத்தை எடுத்து செல்ல நினைத்த அகமத் அதில் கதையையும் கொஞ்சம் விறுவிறுப்பாக சேர்த்து இருக்கலாம். படத்தின் ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் நயன்தாரா, யுவன் ஷங்கர் ராஜா இசை என பல பிளஸ் பாய்ண்ட்கள் இருந்தும் வாய்ப்பை தவற விட்டு விட்டார் அகமத்.
நிலேஷ் கிருஷ்ணா:
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்த இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவிடம் இருந்து ஒரு சூப்பர்ஹிட் படம் வரும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் என்ற பில்ட் அப் எல்லாம் இருந்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்க படம் வழக்கமான ஃபார்முலாவில் போரடித்து ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது.
கல்யாண் கிருஷ்ணன் :
பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி தேவன் என்ற லீட் ரோலில் நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவியை வைத்து உடனே 'அகிலன்' என்ற படத்தை இயக்கி அவரின் ஒட்டுமொத்த இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டார் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன்.
இது தவிர வேறு சில படங்களும் நல்ல வாய்ப்புகள் அமைந்த போதிலும் தோல்வியை தான் சந்தித்தன. ஒரு சில சுமாரான படங்கள் நடிகர்களுக்காக கொஞ்சம் ஓடி ஓரளவு வசூலை பாக்ஸ் ஆபிசில் பெற்று தப்பித்தன.