டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது சர்ச்சையாகி வரும் நிலையில், எம்ஆர்பி எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முடிவிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, தேர்வை எழுதிய மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத் துறைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதைப்போல, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறைக்கான அரசு ஊழியர்களைத் தேர்வு செய்கிறது.


உதவி மருத்துவ நிபுணர் தேர்வு


இதற்கிடையே கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி உதவி மருத்துவ நிபுணர் (MRB assistant surgeon exam) பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. 1021 காலி இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை, தமிழகம் முழுவதிலும் இருந்து 16 ஆயிரம் மருத்துவர்கள் எழுதினர். கணினி வழியில், 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.


தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், உதவி மருத்துவர் தேர்வில் தமிழ்ப் பாடத் தகுதித் தேர்வும் நடத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு தரத்திலான கேள்விகள் அத்தேர்வுகளில் கேட்கப்பட்டன. அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே மருத்துவர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு, ஜூன் 23ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் 8 மாதங்கள் ஆக உள்ள நிலையில், முதன்மை பாடத் தேர்வுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தாமதத்துக்கு என்ன காரணம்?


ஜூன் கடைசியில் தேர்வுவிடைக் குறிப்புகள் வெளியாகின. இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் மருத்துவர்களாகப் பணியாற்றியவர்கள், பணியில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.  


ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு, பணியாற்றிய காலத்தைப் பொறுத்து 2 முதல் 5 மதிப்பெண்கள் வரை வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.


தொடர்ந்து, முதுநிலை மருத்துவம் படித்துக் கொண்டிருந்த மருத்துவ மாணவர்களும், கொரோனா காலத்தில் பணியாற்றிய எங்களுக்கும் ஊக்க மதிப்பெண்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்கு நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வெளியான நிலையில், தற்போது ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.




காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


இதற்கிடையே அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த மருத்துவர் பணியிடங்களின் எண்ணிக்கை 1021ஆக இருந்த போது, ஆட்தேர்வு அறிவிப்பு (Notification) வெளியிடப்பட்டது. அதன்பின், 14 மாதங்களாகி விட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 1752 ஆக அதிகரித்து விட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பதிலில் இதை பொது சுகாதாரத் துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.


இந்த நிலையில், தேர்வு முடிவுகளை விரைந்து அறிவிக்க வேண்டும் என்றும் 14 மாதங்களில் உருவான காலிப் பணியிடங்களையும் சேர்த்து, 1800 பணி இடங்களாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் எனவும் தேர்வை எழுதிய இளம் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த இளம் மருத்துவர் ABP Nadu-விடம் பேசினார். அவர் கூறியதாவது:


‘’கொரோனா காலத்தில் நாங்களும் பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றினோம். ஆனால் கொரோனா காலத்தில் மருத்துவ அலுவலர்களாகப் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் நாங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.


பெற்றவர்களையே சார்ந்து இருக்கும் சூழல்


தேர்வு முடிவுகளுக்காக 8 மாதமாகக் காத்திருக்கிறோம். மருத்துவர் ஆகிவிட்டாலும் வேலைக்குச் செல்ல முடியாததால், ஒவ்வொரு தேவைக்காகவும் பெற்றவர்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது.


1021 மருத்துவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டால் கூட அரசு மருத்துவமனைகளில் அனைத்துக் காலியிடங்களையும் நிரப்ப முடியாது. 731 மருத்துவர் பணியிடங்கள் காலியாகவே இருக்கும். அது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும். அது தடுக்கப்பட வேண்டும்.


எந்தத் தேர்வும் நடக்காது


அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதவி மருத்துவர்களுக்கு இன்னொரு தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எனினும் உடனடியாக அப்படி எந்த ஒரு தேர்வும் நடைபெறாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.


2018ஆம் ஆண்டுக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டுதான் உதவி மருத்துவர் தேர்வு நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு 14 மாதங்களுக்கு முன்பு, 2022 அக்டோபரில் வெளியான நிலையில், தற்போது பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இதை அறிந்துள்ளோம். இந்த நிலையில், பணி இடங்களை 1800 ஆக உயர்த்தி, தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவித்தால், எங்களின் வாழ்க்கை வளம்பெறும்’’


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் தேர்வு குறித்த அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட்டு, தேர்வு முடிவுகளை திட்டமிட்ட காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே இரவு, பகலாகப் படித்துத் தேர்வுக்குத் தயாராகி, அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாமல், கிராம சுகாதார நிலையங்களில் நோயர்கள் காத்து நிற்பதையும் அரசு கவனத்தில்கொள்ள வேண்டியது அவசர, அவசியம்.