ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் உருவாகி வரும் ‘யசோதா’ படத்தின் மேக்கிங் காட்சி வெளியாகி இருக்கிறது.
நடிகை சமந்தா நடிப்பில் இயக்குநர்கள் ஹரிஹரிஷ் இயக்கியுள்ள திரைப்படம் யசோதா. இந்தப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள யசோதா படம், முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 9 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்தப்படத்தில், சமந்தா ஆக்ஷன் தொடர்பான காட்சிகளில் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருப்பதாக அந்தப்படத்தின் தயாரிப்பாளர் பேசி இருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பில், சமந்தா ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபடுவது தொடர்பான மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஹாலிவுட் சண்டை இயக்குநர் யானிக் பென் சமந்தாவுக்கு பயிற்சி கொடுப்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் யானிக் பென் சமந்தாவுடன் பணியாற்றியது குறித்து பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்குக் கிடைத்து வரும் நல்ல வரவேற்பால் நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். சமந்தாவின் தீவிரமான அர்ப்பணிப்பும் ஆர்வமும் மட்டுமே, இந்த சண்டைக் காட்சிகளை அடுத்த நிலைக்கு எடுத்து சென்று பார்வையாளர்களுக்கு பரபரப்பூட்டுவதாக மாற்றியுள்ளது.” என்று பேசியுள்ளார். இதற்கு முன்பு யானிக் பென் சமந்தாவுடன் ‘தி ஃபேமிலி மேன்2’ வெப் சீரிஸில் இணைந்து பணியாற்றினார். தற்போது சிறந்த ஆக்ஷன் காட்சிகளுக்காக மீண்டும் ‘யசோதா’ படத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
ஐகிடோ, கிக் பாக்ஸிங், ஜீத் குனே டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மணல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவரான யானிக் பென் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு சண்டைப் பயிற்சி கொடுத்துள்ளார். அண்மையில் சமந்தா தான் myositis என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு, இன்ஸ்டாகிராம் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.