நடிகை சமந்தா நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'யசோதா' திரைப்படம் உலகளவில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. சர்வதேச அளவில் வரவேற்பை பெற்ற இப்படம் அமெரிக்காவில் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்று 400K$ வசூலித்துள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.
வுமன் சென்ட்ரிக் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு :
ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் ஹரி ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் 'யசோதா'. கர்ப்பமாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதைக்களம். படத்தின் டீசர். போஸ்டர், டிரெய்லர் என அனைத்துமே வெளியானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வுமன் சென்ட்ரிக் திரைப்படமான யசோதா எதிர்பார்ப்பையும் தாண்டி சாதனை படைத்துள்ளது. வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது.
அமெரிக்காவில் வசூலில் சாதனை :
அந்த வகையில் வெளியான மூன்றே நாட்களில் அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளது யசோதா திரைப்படம். அமெரிக்காவில் டாப் 10 படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழ் திரைப்படம் யசோதா. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்று அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸில் 400K$ வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வார இறுதி நாட்களில் வசூல் செய்ததை போலவே திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் நல்ல வசூலை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ.3.5 கோடி வசூலித்த திரைப்படம் மலேசியாவில் 5வது இடத்தை பிடித்துள்ளது என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் 1 , காந்தாரா திரைப்படங்களை தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக அளவிலான வசூலை பெற்ற திரைப்படங்களின் பட்டியலில் சேர்ந்துள்ளது சமந்தா நடித்துள்ள 'யசோதா' திரைப்படம்.
காட்சிகள் அதிகரிப்பு :
தமிழ்நாட்டிலும் பட்டையை கிளப்பி வரும் யசோதா திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருப்பதால் திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் வெளியான மிரள், டிரைவர் ஜமுனா, பரோல் உள்ளிட்ட படங்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது யசோதா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யசோதா திரைப்படத்திற்காக கடினமாக உழைத்த சமந்தாவின் திரை வாழ்க்கையில் இப்படம் நிச்சயமாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பது எந்த சந்தேகமும் இல்லை.