தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை ஹன்சிகா சில தினங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹன்சிகா அவரது வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுடன் பாரீஸில் இருக்கும் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். இதில் Marry Me என்ற வாசகத்தின் முன்பு ஹன்சிகாவிடம் சோஹைல் கதுரியா ப்ரோபோஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதன்மூலம் ஹன்சிகாவின் திருமண செய்தி உறுதியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது திருமணம் தொடர்பான சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த தகவல்களின் படி, ‘ ஹன்சிகா சோஹைல் கதுரியா திருமணம் அடுத்த மாதம் டிசம்பர் 4 ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் திருமண விழா தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த நாளான டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடக்க இருக்கிறது. தொடர்ந்து, அடுத்த நாள் காலை ஹல்டி நிகழ்வு நடக்க இருக்கும் நிலையில் அன்றைய தினம் மாலை ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் வைத்து திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் வைப்பதற்காக இந்திய மற்றும் வெளிநாடு ஆகிய கலாச்சாரம் அடங்கிய அழைப்பதழ்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்துடன் கூடுதல் தகவல் என்னவென்றால், நயன்தாராவை போலவே, ஹன்சிகாவும் தனது திருமணத்தை ஒளிப்பரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக சொலலப்படுகிறது.
ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் கதுரியாவுக்கு இது இரண்டாவது திருமணமாகும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு கோவாவில் ரிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பின்னர் விவாகரத்து செய்தார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஹன்சிகா - சோஹைல் கதுரியா இருவரும் தொழில்முறை பார்ட்னராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹன்சிகாவின் சினிமா வாழ்க்கை
1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி மங்களூருவில் பிறந்த நடிகை ஹன்சிகா, 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடரான ஷக்கலக்கா பூம் பூம் தொடரின் மூலம் 2000 ஆம் ஆண்டில் தனது கலையுலக வாழ்வில் அறிமுகமானார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான எஸ்கேப் ஃப்ரம் தாலிபான் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும், 2007 ஆம் ஆண்டு தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினும் ஆனார்.
தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த ஹன்சிகா 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். பின்னர் விஜய், சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி, ஜீவா, சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.
இதில் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அது முறிந்தது. தொடர்ந்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வந்த ஹன்சிகா கடுமையான உடற்பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.