மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். யாஷிகாவின் நண்பர்களில் ஒருவரான பவானி வாலிச்செட்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.


யாஷிகாவும் அவர்களுடன் வந்த இரண்டு நண்பர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் யாஷிகா விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த நிலையில், அவரது தங்கை ஓஷீன் ஆனந்த், யஷிகாவின் உடல்நிலை குறித்து தகவல் கூறியுள்ளார்.


யஷிகா இப்போது சுயநினைவாக உள்ளார் என்ற செய்தியைப் பகிர்ந்த ஓஷீன், ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும் அறிவித்தார். அதே நேரத்தில் அடுத்த சில நாட்களில் எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்றும் கூறினார்.


இதுதொடர்பாக அவர் தனது சமூகவலை பக்கத்தில், ‘அனைவருக்கும் வணக்கம் உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. யாஷிகா இப்போது சுய நினைவாக இருக்கிறார். மேலும்  கடவுளின் அருளால் அவரது ஒரு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.  தற்போது ஐசியுவில் இருக்கும் அவருக்கு சில நாட்களில் பல எலும்பு முறிவுகளின் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.




இந்த விபத்தைத் தொடர்ந்து, மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து யாஷிகாவிடம், மகாபலிபுரம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். அதில்,யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது , திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால், காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும், மேலும் விபத்து நடந்த பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த நண்பர்களை காப்பாற்ற கூச்சல் விட்டதாகவும் அவருடைய வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாஷிகா ஆனந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 279, 337, 304 A அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும் வண்ணம் காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


முன்னதாக, யாஷிகா நன்றாக இருப்பதாக யாஷிகாவின் நெருங்கிய நண்பரும் நடிகையுமான ஐஸ்வர்யா தத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


நடிகர் எஸ்.ஜே. சூர்யா, யாஷிகாவுடன் இணைந்து வரவிருக்கும் ‘கடமையை செய்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும், யாஷிகா விரைவாக குணமடைய வேண்டும் என்றும் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து கூறினார்.  இந்தப் படத்தின் படப்பிடிப்பை யாஷிகா சமீபத்தில்தான் முடித்திருந்தார்.


 ‘கவலை வேண்டாம்’  படத்தின் மூலம் அறிமுகமான யஷிகா, கார்த்திக் நரேனின் ‘துருவங்கள் பதினாறு’ படம் திருப்புமுனை கொடுத்தது. இதனைத்தொடர்ந்து, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மற்றும் ‘ஸோம்பி’ போன்ற படங்களில் நடித்தார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழின் இரண்டாவது சீசனில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.