கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் இன்று ஆஜரான நிலையில்,  ஜூலை மாதம் மீண்டும் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


கோலிவுட் சினிமாவில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து,  நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த்,  2018ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.


இந்நிலையில்,சென்ற 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது பள்ளித்தோழி வள்ளிசெட்டி பவனி (28) உள்ளிட்ட மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று விட்டு சென்னை திரும்பியபோது யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கி, அவரது தோழி வள்ளி பவனிசெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


ஜூலை மாதம் 2021, நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி வள்ளிசெட்டி பவனி, ஆண் நண்பர்கள் சையத் (31), ஆமீர் (32) ஆகியோர் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றனர். அங்கிருந்து நள்ளிரவு 12 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் இவர்கள் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த நிலையில், மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது கார் நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் வள்ளிசெட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மாமல்லபுரம் காவல் துறையினருக்கு அளித்த தகவலை அடுத்து, படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


யாஷிகா ஆனந்திற்கு முதுகுத்தண்டில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு நீண்ட காலமாக சிகிச்சைப் பெற்றார். தற்போது முழுமையாக மீண்டு மீண்டும் படங்கள், சமூக வலைதளங்கள் என யாஷிகா ஆக்டிவ்வாக செயல்பட்டுவருகிறார்.


யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாகவும், அவரது தோழி பவானி வள்ளி செட்டி சீட் பெல்ட் அணியாததால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்தபோது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் யாஷிகாவின் வாக்குமூலத்தில் தகவல்கள் வெளியாகின.


இச்சூழலில் மாமல்லபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை  அடுத்து, செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த இந்த வழக்கு விசாரணைக்காக சென்ற மார்ச் 21ஆம் தேதி நேரில் ஆஜராக யாஷிகாவுக்கு  உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 


இதனையடுத்து கடந்த மாதம் மார்ச் 25ஆம் தேதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் யாஷிகா ஆஜரானார்.


தொடர்ந்து ஏப்ர்.25ஆம் தேதியான இன்று யாஷிகா ஆஜராக நீதிபதி மேவிஸ் தீஸ் தீபி,ஆ சுந்தரவதனா உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், விசாரணைக்குப் பிறகு மீண்டும் வரும் ஜூலை 27ஆம் தேதி ஆஜராகுமாறு யாஷிகாவுக்கு செஙகல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.