நடிகை, பிக்பாஸ் போட்டியாளர், மாடல் என பல்வேறு முகங்கள் கொண்ட யாஷிகா ஆனந்த் அண்மையில் கார் விபத்தில் காயமடைந்தார். அந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி உயிரிழந்தார். தோழியின் உயிரிழப்பு, தனது உடல் வேதனைகளைத் தாண்டி சமூகவலைதளங்களில் தான் ட்ரோல் செய்யப்படும் விதம், தான் ஏன் உயிர்பிழைத்தோம் என்ற எண்ணத்தைத் தனக்குத் தருவதாகக் கூறுகிறார் யாஷிகா.
ஜூலை 24 நடந்தது என்ன?
ஜூலை 24 ஆம் தேதியன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் அந்த கோர விபத்து நடந்தது. அந்த விபத்து குறித்து யாஷிகா ஆனந்த், தி ஹிந்து, ஆங்கிலம் நாளிதழுக்கு விரிவாக விளக்கியுள்ளார்.
ஜூலை 24 (சனிக்கிழமை) நான் எனது நண்பர்கள் 4 பேருடன் ஈசி.ஆருக்குச் சென்றிருந்தேன். இரவு உணவை முடித்து எனது நெருங்கிய தோழி பவனி இன்னும் இரண்டு நண்பர்கள் என நான்கு பேரும் சென்னை நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். நான் தான் எனது டாடா ஹேரியர் காரை ஓட்டி வந்தேன். பவனி முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்திருந்தார். சீட் பெல்ட் அணியவில்லை. நான் சீட் பெல்ட் போட்டிருந்தேன். அப்போது திடீரென டிவைடரில் கார் மோதியது. உடனே கார் கவிழ்ந்தது. மூன்று முறை சுழற்றியடித்து கார் கீழே தலைகுப்புற விழுந்தது. என் கண் முன்னாடியே பவனி ஜன்னலின் வெளியாக தூக்கி வீசப்பட்டார். சில நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் சூழ்ந்த எங்களை வெளியே எடுத்தனர். சன் ரூஃபை வெட்டியெடுத்தே எங்களை வெளியே கொண்டுவர முடிந்தது. என்னை வெளியே தூக்கியபோது என்னால் நிற்க முடியவில்லை. முற்றிலுமாக முடங்கியதுபோல் உணர்ந்தேன். அப்புறம் மருத்துவமனைக்குச் சென்று வெகு நேரத்துக்குப் பின்னரே பவனி இறந்தது எனக்குத் தெரிந்தது. உடைந்துபோனேன்.
எனக்கும் பவானிக்கும் 6 ஆண்டுகள் நட்பு. அவர் மாடலிங்கில் இருந்தார். பின்னர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு தனக்குப் பிடித்தமான பொறியியல் வேலையில் இணைந்தார். பெற்றோருடன் நேரம் செலவிட இந்தியா வந்த அவர், என்னைப் பார்க்கவே சென்னை வந்தார். அவருடன் மகிழ்ச்சியான தருணத்தை எதிர்நோக்கியே நான் ஈசிஆர் சென்றேன். நான் காரை வேகமாக ஓட்டவில்லை. நான் மது அருந்தி இருக்கவில்லை. எந்தவித போதை வஸ்துக்களையும் உபயோகிக்கவில்லை. அன்று நடந்தது வெறும் விபத்து. நான் காரை ஓட்டி வந்த சாலை அவ்வளவு இருட்டாக இருந்தது. நொடிப் பொழுது கவனக் குறைவால் நான் ஓட்டிவந்த வாகனம் விபத்துக்குள்ளானது. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதனாலேயே நான் என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் பரப்பப்பட்ட அவதூறுகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமில்லை.
குற்ற உணர்ச்சியால் நான் உடைந்துபோய் உள்ளேன். பவானி இறந்துவிட்டாள், நான் மட்டும் ஏன் உயிருடன் இருக்கிறேன் என்பதுதான் எனது கேள்வியாக இருக்கிறது. நான் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் இதுபோன்ற போலி வீடியோக்களைப் பரப்புகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவருடன் நேர்ந்த விபத்துடன் தொடர்புபடுத்தி என்னை ஒரு சீரியல் வில்லன் போல் நடத்துகின்றனர். இது முட்டாள்தனமானது.
நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். ஆனால், இன்னும் 6 மாதங்களுக்கு என்னால் இயங்க முடியாது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் மிக்கப்பெரிய வேதனையில் உள்ளேன். இதற்காக கவுன்சிலங் ஏற்பாடு செய்துள்ளேன். நடந்தவற்றையெல்லாம் பேசி வீடியோ வெளியிடக் கூட எனக்குத் தெம்பு இல்லை. இப்போது என் நினைவெல்லாம் என் பவானியை சுற்றியே உள்ளது.
இன்னும் 6 மாதங்களுக்கு தொழில் ரீதியாகவும் நான் நிறைய இழப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த வேளையில் என்னை ட்ரோல் செய்வதை நிறுத்துவார்கள் என நான் நம்புகிறேன். புறம்பேசுதல் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. பவானி என்னை மன்னிப்பாள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.