தஞ்சாவூர்: சொத்துவரியை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தொடங்கும் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுகளுக்கான சொத்துவரியை அரையாண்டு ஆரம்பித்த 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். ஆனால் வரி விதிப்புதாரர்கள் பெரும்பாலும் செப்டம்பர்,  மார்ச் மாத இறுதியில் முதல் மற்றும் 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வெரு அரையாண்டிலும் முதல் 30 நாட்களுக்குள் சொத்துவரியை செலுத்தி 5 சதவீதம் அதிக பட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெற நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.

எனவே தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 30-ந்தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி விதிப்புதாரர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் அதிக அளவில் சொத்துவரியை மாநகராட்சிக்கு செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சொத்து வரியை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சிகள் முடிவெடுத்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள வீடுகளுக்கு மூன்று முறை நோடடீஸ் அனுப்பி, ஆறு மாதம் அவகாசம் கொடுக்கப்படும். பிறகு வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதிலும் அலட்சியம் காட்டினால் வீட்டிற்கு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சொத்து வரியை முழுவதுமாக வசூல் செய்தால் மாநகராட்சிகளுக்கு சிறப்பான வருமானம் கிடைக்கும். இதனால் தற்போது சொத்துவரியை வசூல் செய்வதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் களத்தில் இறங்கி உள்ளன. வரி வசூலில் எவ்வித தளர்வும் காட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை தமிழக அரசு கடந்த 1-ந்தேதி முதல் உயர்த்தியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் உள்ள 600 சதுர அடிக்கும் குறைவான வீடுகளுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு சென்னையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாநகராட்சிகளுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு சொத்து வரியை மாற்றியமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அது 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. சொத்து வரியை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சந்தை விலை, பணவீக்கம், உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம், செலவு பணவீக்க விகிதம் ஆகியவற்றை ஆராய்ந்தது. அதில், 1998-ல் இருந்து 2022 வரை ஒட்டுமொத்த விலை குறியீடு 2.98 மடங்கு உயர்ந்துள்ளது.

இது, 2008-ல் இருந்து 2022 வரை மட்டும் 1.79 மடங்கு உயர்ந்துள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம் 5.2 மடங்கு அதாவது, ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 272 கோடியில் இருந்து 2022-ம் ஆண்டு ரூ.21 லட்சத்து 79 ஆயிரத்து 655 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதங்களை அடிப்படையாக வைத்தே சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.