1985ம் ஆண்டு கலைப்புலி.எஸ். தாணு தயாரிப்பில் சக்தி கண்ணன் இயக்கிய ஹாரர் திகில் திரைப்படம் 'யார்?'. இப்படத்தில் நடிகர் அர்ஜுன், நளினி, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கௌரவ வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு காட்சியில் தோன்றினார். இப்படம் வெளியாகி 1985ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி இப்படம் வெளியானது. எனவே இன்றோடு இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
சாத்தானின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டார்களா?
பூமியின் 8 கிரகங்களும் ஒரே நேர்கோட்டியில் வரும் போது ஒரு அமானுஸ்ய அதிசயம் நடக்கும். அதே நேரத்தில் மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் தயார் இறந்துபோவதால் பணக்காரரான ஜெய்சங்கர் அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார். அந்த சிறுவன் வளர்ந்து பதினெட்டு வயதை அடையும் போது சில விசித்திரமான சம்பவங்களை நடைபெறுகின்றன. அதற்கு காரணம் அந்த பையன் சாத்தானின் மகன் என்பது தெரிய வருகிறது. இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு அவனை தீய செயலில் இருந்து விடுவிக்க முயற்சியெடுக்கும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர் நடிகர் அர்ஜுன் மற்றும் நடிகை நளினி. ரகசியத்தை தெரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்து கொள்ளப்படுகிறார்கள். இப்படி தீய செயலில் இருந்து மீள வேண்டும் என்றால் கடவுள் சக்தியை அதிகரிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். உலகத்தை எப்படியாவது சாத்தானின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறார்கள். இந்த சமயத்தில் அந்த சாத்தானின் மகன் ஒரு பிசாசு குழந்தையை உருவாக்க முயற்சி செய்கிறான். கடைசியில் அர்ஜுன் மற்றும் நளினி இந்த போராட்டத்தில் வென்றார்களா என்பது தான் படத்தின் கதை.
ரசிகர்கள் விரும்பும் திகில் திரைப்படம்:
பொதுவாகவே திகில் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அந்த காலத்தில் திகில் திரைப்படங்கள் என்பது அவ்வப்போது தான் வெளியாகும். அப்படி மிகவும் வித்தியாசமான திகில் திரைப்படமாக "யார்?" படம் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வி.எஸ். நரசிம்மனின் பின்னணி இசை மற்றும் ராஜராஜனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. மிகவும் த்ரில்லிங்காக படத்தை நகர்த்தியது பாராட்டை பெற்றது.
வெற்றிப்படமாக அமைந்த யார் திரைப்படம்:
திகில் திரைப்படமான " யார்? " திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ். தாணு கேட்டு கொண்டதின் பேரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஜினிகாந்த்தாகவே ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார். இப்படத்தின் இயக்குனர் சக்தி கண்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து யார் கண்ணன் என பிரபலமாக அழைக்கப்பட்டார். மேலும் நடிகர் அர்ஜுனின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அவரின் திரை வாழ்வில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. நடிகை நளினியும் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.
10 ரூபாய் மதிப்புள்ள பொம்மை ஒன்று, நகர்ந்து வந்து அனைவரையும் பயத்தில் திகைக்க வைத்ததும், இந்த படத்தில் தான்.