சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.






எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது. 4 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடந்து நேற்று படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அவர் தான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்றும், படம் குறித்தும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 


அதில்,  நேற்று கோவையில் என்னுடைய மணிவிழாவை நண்பர்கள் கொண்டாடியதால் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் மானசீகமாக நான் உங்களுடன் தான் இருக்கிறேன். இந்த படம் மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது. எப்படி வாழ்க்கை இருக்கிறதோ, அதற்கு மிக இணக்கமாகவே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. இரண்டு மனிதர்கள்  விதியின் வழியில் ஒரு ஒழுக்கில் விழுகிறான். ஒருவன் தன்னுள்ளே இருக்கின்ற தீ காரணமாக ஓரிடத்துக்கு செல்கிறான். மற்றொருவன் அதற்கு நேர் எதிராக இன்னொரு இடத்துக்கு செல்கிறார். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கும் போது அடையாளம் கண்டுக் கொள்கிறார்கள். ஆனால் நெருங்கவில்லை. 



நம்முடன் பள்ளியில் படித்த மாணவனை நான் பார்க்கும் போது நமக்கு முற்றிலும் அந்நியனாக அவர் மாறியிருப்பதை பார்க்கலாம். அதைத்தான் நிழல் உலகம், பரபரப்பான சம்பவங்களுடன் உணர்ச்சி கொந்தளிப்புடன் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்த படம் இருவருடைய படம். ஒன்று கௌதம் மேனன். அவர் முந்தைய படங்களை விட காட்சி அழகை அளித்திருக்கிறார். சின்ன கதாபாத்திரம் கூட தங்கள் முக்கியத்துவம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 


இரண்டாவது சிலம்பரனுடைய படம். நடை, உடை. நடிப்பு என அவ்வளவு நுட்பமாக செதுக்கியிருக்கிறார். அது படத்தின் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அதன்பிறகு இந்த படத்தின் வெற்றிக்கு முக முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசை, தமிழகத்தை கலக்கி வரும் மல்லிப்பூ பாடல் படம் பார்க்க அனைவரையும் அழைத்து வரும் காரணமாக அமைந்திருக்கிறது என ஜெயமோகன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை நாம் தொடருவோம். அடுத்த பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கும். இன்னும் தீவிரமாக, ஆழமாக உருவாக்க இந்நேரத்தில் சூளுரைப்போம் என ஜெயமோகன் கூறியுள்ளார்.