‛நா தான் கேசு கொடு’ இப்படி ஒரு தலைப்பை பார்க்கும் போது, கொஞ்சம் இல்லை ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். உண்மையில் படமும் அப்படி தான். சிறிய திருட்டுகளை அரங்கேற்றும் திருடன். போலீசுக்கு பயந்து தப்பி இன்னொரு இடத்தில் தஞ்சம் புகுகிறான். அங்கு பெண் மீது காதல், கல்யாணம் ஆகாமலேயே அந்த பெண் கர்ப்பிணியாகிறாள்.
இதற்கிடையில் அங்குள்ள திருவிழாவுக்கு செல்லும் அந்த ஆண், நிகழ்ச்சி முடிந்து வரும் போது, எம்.எல்.ஏ., வீட்டில் ஏறிக் குதிக்கிறார். அங்கிருந்த நாய்கள் அவனை கடித்து குதற, திருடன் என நினைத்துஅவனை பிடிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். பழைய வழக்குகளை வைத்து, இவன் திருடத்தான் வந்தான் என்று அவன் மீது குற்றம்சாட்டப்படுகிறது. தன்னை ஆட்டோ ஒன்று ஏற்ற வந்ததாகவும், அதற்கு பயந்து தாவி எம்.எல்.ஏ., வீட்டில் ஏறி குதித்ததாகவும் தானே வாதிடுகிறார் அந்த ஆண்.
ஆட்டோ ஏன் மோத வந்தது, அதற்கு ரோட்டில் இருந்த குழி தான் காரணம் என்றும், அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் தான் காரணம் என்றும், அவர் மீது வழக்கு தொடர்கிறார் அந்த ஆண். அதை நிரூபிக்கவும், அதற்கான சாட்சியங்களை அழைத்து வரவும் சராசரி மனிதன் எடுக்கும் முயற்சிகளும், அவரே வழக்கறிஞராக மாறி வாதங்களை வைப்பதும் தான் கதை.
மலையாள சினிமாக்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன என்பதை ஒவ்வொரு படங்களும் தன் படைப்புகள் வழியாக சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அப்படி தான், இந்த படமும். ஒரு முன்னாள் திருடன், ஒரு சராசரி மனிதனாக காட்சிகளில் குஞ்சாகோ கோபன் தத்ரூபமாக நடித்திருக்கிறார். திருவிழாக்களில் இசைக்கு அவர் ஆடும் போதும், நாய் கடித்து ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் போதும், மனிதர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
காயத்ரியின் கதாபாத்திரம் இன்னும் இயல்பாக இருக்கிறது. தமிழில் அவரை வீணடிக்கிறார்கள் என்றே தெரிகிறது. மற்றபடி, படத்தில் கதையின் பாத்திரங்களாக வரும் ஒவ்வொருவரும் மிக மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். நீதிபதியில் தொடங்கி, வழக்கறிஞர்கள், போலீஸ்காரர்கள், சாட்சிகள் என எல்லோருமே நல்ல நடிகர் தேர்வு.
எளிய மனிதனால் அரசு இயந்திரத்தை கேள்வி கேட்க முடியும் என்பது கேரளா மாதிரியான மாநிலங்களில் சர்வசாதாரணம் என நாம் நினைக்கிறோம். ஆனால், அங்கும் அதற்கு சில தடைகள் உண்டு. அதை எப்படி உடைக்கலாம் என்பதை அருமையாக காட்டியிருக்கிறார்கள். டவுன் வின்சென்ட் இசை, படத்தோடு பயணிக்கிறது. ரதீஷ் பாலகிருஷ்ண படுவாலின் எழுத்தும் இயக்கமும் தத்ரூபம்.
மலையாளத்தில் தயாரான இத்திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. மலையாள பட விரும்பிகளுக்கு இந்த படம் நல்ல படையல். வழக்கமான கேரள படங்களுக்கான நீளம் இதிலும் இருந்தாலும், எதார்த்தத்திற்கு அது தேவைப்படுகிறது.