மேற்கு நாடுகளில் பாப் சிங்கர்கள் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கு நிகராக புகழ்பெற்றவர்கள். அவர்களுக்கு நிகராக சம்பாதிப்பவர்கள். உலகம் முழுவது கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர்கள். ஆனால், இந்தியாவில் இண்டிபெண்டண்ட் இசை எனும் சுயாதீன இசை இப்போது தான் அரும்பு விட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
திரைப்படங்களுக்கு அப்பால் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையை முழுமூச்சாக செய்து வருகிறார்கள். இதில் சிலர் திரைப்படங்களில் பங்காற்றியிருக்கிறார்கள். மற்றவர்கள் குறிப்பிட்ட மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறார்கள். ஒரு வித்தியாசத்திற்காக நீங்கள் புதுப் பாடல்களை கேட்க விரும்பினால் இந்தக் கலைஞர்களின் இசையைக் கேட்டுப்பாருங்கள்.
சியோனார் - Sieonner
இன்று கொஞ்சம் பரவலாகவே அறியப்படுபவர் சியோனார். ஆனால் அவர் தனது பயணத்தைத் தொடங்கியபோது தனது திறமையை மட்'டுமே நம்பினார். தானே பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவும் செய்கிறார். தனிமை விரும்பியான சியோனார் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதனை தனது ஆதர்சமாகக் கொண்டவர். பொன்னிற மாலை,ஏன் ரோசா, ஒ மஹாரானி என இவரது பல பாடல்கள் பரவலாக கேட்கப்படுபவை.
சுயாதீன இசையைப் பற்றிய இவரது புரிதல் மிக ஆழமானது. ஸ்பாடிஃபை (Spotify) தளத்தில் இவரது பாடல்கள் கேட்கக் கிடைக்கின்றன.
கேபர் வாசுகி
நீ வெக்கம் கோரி என்கிற இவரது பாடல் மிகவும் பிரசித்தி. ஹலிதா ஷமீம் இயக்கிய ஏலே திரைப்படத்தின் வழியாக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் கேபர் வாசுகி.
வைசாக்
அண்மைக்காலமாக ட்ரெண்டில் இருப்பவர். ஸ்பாடிஃபையில் ‘மயிராண்டி’ என்கிற இவரது பாடல் வெளியாகி நல்ல ஆடியன்ஸ் ரென்பான்சைப் பெற்றது. தற்போது இந்தப் பாடல் காக்கா கதை என்கிற பெயரில் திங் மியுசிகால் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘ராண்ட கொஞ்சம் கேளு’, ‘எதுவும் கெடைக்கலனா’ ஆகிய பாடல்கள் இன்றைய தலைமுறையினரின் வைபோடு பொருந்திப் போகும் பாடல்கள். அஜித் குமாரின் துணிவு படத்தின் சில்லா சில்லா என்கிறப் பாடலை எழுதியிருக்கிறார்.
அசல் கோலாரு
கடந்த ஆண்டு ‘ஜோர்தால’ என்கிறப் பாடல் வழியாக அனைவரையும் ஆட வைத்த ராப் இசைப் பாடகர்.. பிக்பாஸில் போட்டியாளராகக் கலந்துகொண்ட பிறகு இவரது பாடல்கள் இன்னும் வரவேற்பைப் பெற்றன.
சுசாந்திகா
புது வீட்டுக்குள் குடிபெயர்ந்து எந்த பொருட்களும் இல்லாமல் தனிமையில் உட்கார்ந்து பேசினால் எக்கோ அடிப்பது போன்ற இவரது குரலுக்காகவே நீங்கள் இவரது இசையைக் கேட்கவேண்டும். மாங்குயிலே பூங்குயிலே பாடலை ஒரு ரீமிக்ஸ் செய்திருக்கிறார் அதைக் கேளுங்கள். சேட்டையான ஒரு அனுபவம் அது.
இந்த வரிசையில் குறிப்பிடப்பட்டவர்களைக் கடந்து எத்தனையோ சுயாதீன கலைஞர்கள் இன்று தங்களது உழைப்பையும் திறமையையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திரையிசைக்கு வருவது வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. தொடர்ச்சியாக சென்னை போன்ற நகரங்களில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அவர்களை நாம் தேடியும் செல்லலாம்.