மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3ம் தேதி தொடங்கிய இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.



உலகக்கோப்பையே வெல்லாத அணி:


சர்வசேத ஆடவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மிக மிக முக்கியமான அணிகள் ஆகும். ஆனால், இதுவரை நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான உலகக்கோப்பையை ஒரு முறை கூட இந்த இரு அணிகளும் கைப்பற்றியதில்லை. நியூசிலாந்து அணி ஒரே ஒரு முறை டெஸ்ட் சாம்பியவ்ன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.


மகளிர் அணிகளைப் பொறுத்தவரையிலுமே இந்த இரு அணிகளும் மிக மிக முக்கியமான அணிகள் ஆகும். மகளிர் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணி ஒரே ஒரு முறை மட்டும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இதுவரை எந்த உலகக்கோப்பை பட்டத்தையும் கைப்பற்றியதில்லை. இதனால், அவர்களை ஜோக்கர்ஸ் என்றும் சிலர் விமர்சிப்பது உண்டு.

தவறும் உலகக்கோப்பை:


கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆடவர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இதில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி தென்னாப்பிரிக்கா கோப்பையை பறிகொடுத்தது. இந்த சூழலில், மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறியுள்ளது.


தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அந்த நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆடவர் அணி தவறவிட்ட டி20 உலகக்கோப்பையை மகளிர் அணியினர் கைப்பற்றுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


அரையிறுதியில் அபாரம்:


இந்த தொடரைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சிறப்பாக ஆடி வருகின்றனர். இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியைத் தழுவியது. அரையிறுதியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 135 ரன்கள் இலக்கை வெறும் 17.2 ஓவர்களில் எட்டியது தென்னாப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.


அந்த அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் நல்ல ஃபார்மில் உள்ளார். போஸ்ச் அதிரடியாக ஆடி 74 ரன்களை குவித்தார். மாரிசன் காப், காகா, லாபா, ட்ரையன் சிறப்பாக பந்துவீசுவதும் அந்த அணிக்கு பலமாக அமைந்துள்ளது. நியூசிலாந்து அணி இந்த தொடரில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோல்வி அடைந்த நிலையில் மற்ற அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


ஜோக்கர்ஸ் பட்டம்:


தென்னாப்பிரிக்க அணி இந்த உலகக்கோப்பையை வென்று ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறிவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்றிடாத இரு அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை முத்தமிடப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.