விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் நன்கு செழித்தி வளர்ந்து வந்த தமிழ்நாடு மாநில மரமான பனம் மரத்தை மேடை அமைக்கும் நிறுவனத்தினர் பிடுங்கி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாக அரசியலுக்கு வந்த விஜய் 



நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.


இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.


இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல்  அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.

 

பிடுங்கி எறியப்பட்ட பனை மரம்



இந்த நிலையில் மாநாடு மேடை அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் இருந்த நல்ல வளர்ந்த நிலையில் இருந்த தமிழ்நாடு மாநில மரமான ஐந்து பனற்கன்றுகளை மாநாடு மேடை அமைக்கும் நிறுவனத்தினர் பிடுங்கி எறிந்துள்ளனர். மாநாடு நடைபெறும் திடலில் பனங்கன்றுகள் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாக வகையில் இருந்தாலும், அதனை பிடுங்கி எறிந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனங்கன்றுகளை பிடுங்கி எறியாமல் கழித்து விட்டிருந்தாலே நன்றாக வளர்ந்திருக்கும் ஒரு புறம்.



தமிழக அரசு பனை விதைகளை நடவு செய்து பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற நிலையில் பனைங்கன்றுகள் பிடிங்கப்பட்டு தவிர்த்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக வெற்றிக்கழத்தின் லெட்டர் பேடில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டுள்ள  நிலையில் அதற்கு நேர் எதிர்மறையாக பனங்கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் மாநில மரம் 'பனை'


தமிழ்நாட்டின் மாநில மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள மரம், பனை ஆகும். இது வனவிலங்குகளுக்கு உணவு, நமது கால்நடைகளுக்குத் தீவனம், நீர்நிலைகளுக்குச் செறிவூட்டுதல், பல்லுயிர்ப் பெருக்கம், மனிதனுக்கு வேலைவாய்ப்பு என்று வேரில் இருந்து பழம் வரை அத்தனையும் பயனளிக்கக் கூடியது. மேலும் தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தது பனை.


ஆனால், பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து பனை மரங்கள் அதிகளவு அழிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பனையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்ட தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் பலரும் இதைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.