தமிழ் சினிமாவின் திரைக்களம் முதற்கொண்டு டென்னிஸ் போர்க்களம் வரையில், துறைசார் ஜாம்பவான்கள் ”தலைவா” என அழைக்கப்படுவது ஏன் என்பதை இங்கு அறியலாமா..! விம்பிள்டன் போட்ட ஒற்றை டிவீட்டிற்கு பின்பு, எத்தனை பெரிய வரலாற்று சாதனைகள் உள்ளன என்பது தெரியுமா?


தலைவா எனும் பிராண்ட்


ஒரு துறையில் எத்தனையோ சாதனையாளர்கள் இருந்தாலும், தனக்கென ஒரு தவிர்க்க முடியாத வரலாற்றை படைத்து என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரே ஒரு நபருக்கு தான் ”தலைவா” எனும் இந்த பட்டம் வழங்கப்படுகிறது. எப்படி பூமிக்கு ஒரே வானம், ஒரே சூரியனோ அப்படி தான் இந்த தலைவா பட்டமும். விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு குழந்தை உருவாக 10 மாஷம் தேவைப்படும், ஒரு பட்டதாரி உருவாக 3 வருஷம் தேவைப்படும், ஆனால் ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம்ம்ம்மே தேவைப்படும். அப்படி இந்த யுகமே கொண்டாடும் ஆகச் சிறந்த ஆளுமையான ரஜினியை தொடர்ந்து டென்னிஸ் ஜாம்பவானான ஃபெடரையும் ரசிகர்கள் தலைவா என கொண்டாடி வருகின்றனர்.


”தலைவா”வின் அடையாளம்:


 தமிழ் சினிமாவில் அனைவரும் அறிந்த முதல் சூப்பர் ஸ்டார் என்றால் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான். அரசியலிலும் கோலோச்சிய அவர் சினிமா ரசிகர்களாலும் தொண்டர்களாலும், தலைவர் என உரிமையுடன் அழைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து இன்று வரை தமிழ் சினிமாவில் சூப்ப ர் ஸ்டாராகா ஒளிர்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரையும் தலைவர் என ஆரம்பத்தில் ரசிகர்கள் அழைக்க தொடங்கினாலும், அந்த வார்த்தை எம்.ஜி.ஆருக்கே உரித்தானதாக இருந்தது. இதனால், காலப்போக்கில் ரஜினி தலைவர் என்ற அந்தஸ்தில் இருந்து தலைவா-வாக மாறினார். தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியாவை கடந்து வெளிநாடுகளிலும் திரையுலகில் தலைவா என்றால் அது ரஜினி தான். இந்த பெருமை அவரது மாஸிற்கும், என்றும் குறையாத கரிஷ்மாவிற்கும் ரசிகர்களால் வழங்கப்பட்ட ஆகச்சிறந்த பட்டமாகும். 


வீழ்த்த முடியா ரஜினி..!


சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு எத்தனையோ பட்டங்கள் கொடுக்கப்பட்டாலும், அதில் தலைவா என்பது மட்டும் என்றுமே தனித்துவமானது. அது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிட்டுவதும் இல்லை. தலைவா என அழைப்பதன் மூலம், ஒரு பெரும் சமூகமே அவரை பின்தொடர தயாராக உள்ளது என்பதையும் நாம் உணர தவறக்கூடாது. ஏனென்றால், தமிழ் சினிமாவில் தற்போது வியாபார ரீதியாக சிலர் ரஜினியை முந்தி இருந்தாலும், அவருக்கான இடம் என்பதை எவராலும் இதுவரை நெருங்க முடியவில்லை. ஏனென்றால் ரஜினியை தாண்டி சென்றோருக்கான முன்மாதிரியே ரஜினி தான்.


ஃபெடரர் எனும் வரலாறு..!


சினிமா, கிரிக்கெட் என வெவ்வேறு துறைகள் மூலம் நமக்கு அறிமுகமாகி, பின்பு அந்த துறைகளுக்கே அடையாளமாக மாறியவர்கள் தான் ரஜினி, தோனி போன்றோர். அந்த வகையில், டென்னிஸ் விளையாட்டின் மூலம் நமக்கு அறிமுகமாகி, இன்றி அவரது பெயரை குறிப்பிடமால் டென்னிஸ் வரலாற்றை எழுதவே முடியாது எனும் அளவிற்கு பிரமாண்ட வளர்ச்சி பெற்றவர் தான் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர். டென்னிஸே விளையாடதவர்கள் கூட, ஃபெடரர் என்ற பெயரை வாழ்வில் ஒருமுறையாவது செவிபட கேட்டிருப்பார்கள். ஏனென்றால், டென்னிஸ் உலகில் அவர் நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல் அத்தகையது. அவர் நிர்ணயித்த இலக்குகளை தான் நடாலும், ஜோகோவிச்சும் மாற்றி மாற்றி தகர்த்து கொண்டிருக்கின்றனர். அப்படி பட்ட ஃபெடரைரை பெருமைப்படுத்தும் விதமாக தான்,  டென்னிஸ் உலகின் முக்கிய அமைப்பாக கருதப்படும்  விம்பிள்டன் அண்மையில் அவரை ”தலைவா” என குறிப்பிட்டது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.