இந்திய பங்குச்சந்தையில் முக்கிய முதலீட்டாளரான  மறைந்த ஜுன்ஜுன்வாலாவின் மனைவி, சில நிமிடங்களில் ரூ.500 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளார்.


டைட்டன் பங்குகள் கண்ட ஏற்றம்:


தங்க நகைகள் விற்பனையை முதன்மையாக கொண்ட டைட்டன் நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 20 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக அறிவித்தது. இதனால், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை தொடங்கியதுமே, டைட்டன் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு முன்பு எப்போது இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி, ஒரே நாளில் டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 3 % அளவிற்கு ஏற்றம் கண்டன.


புதிய உச்சம்:


இன்று பங்குச்சந்த தொடங்கியதுமே டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் கிடுகிடுவென உயர்ந்து, 3.39 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்தது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.3, 211.10-ஐ எட்டியது. இதனால், அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக ரூ.9,357 கோடி உயர்ந்து ரூ. 275,720 கோடியிலிருந்து  ரூ.2,85,077 கோடியை எட்டியது.


ரூ.500 கோடி வருவாய் ஈட்டிய ரேகா ஜுன்ஜுன்வாலா:


டைட்டன் பங்குகளின் மதிப்பு கண்ட ஏற்றம், பெரும் முதலீட்டாளரான மறைந்த ஜுன்ஜுன்வாலாவின் மனைவிக்கு ரூ.500 கோடியை வருவாயாக தந்துள்ளது. டைட்டன் நிறுவனத்தில் 5.29 சதவிகித பங்குகளை ரேகா தன்னகத்தே கொண்டுள்ளார். இந்நிலையில், டைட்டன் நிறுவன பங்குகள் உயர்ந்ததன் மூலம் ரேகா வைத்துள்ள பங்குகளின் மதிப்பு புதியதாக ரூ.500 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, அவர் வகித்து இருந்த பல்வேறு பங்குகளில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தை மதிப்பு ரூ. 15,080.57-ஐ எட்டியது தான் அதிகபட்சம் என கூறப்படுகிறது.


விரிவடையும் டைட்டன்:


டைட்டன் கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டின் கடந்த காலாண்டில் 13 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளன. அதேபோன்று, அனலாக் கடிகாரங்கள் 8 சதவிகிதம் அளவிற்கும், கைக்கடிகாரங்கள் 84 சதவிகிதம் அளவிற்கும் வளர்ச்சி கண்டுள்ளன.


டைட்டன் கண்ட வளர்ச்சி:


வளர்ச்சி அதிகரித்தன் மூலம் கடந்த காலாண்டில் புதியதாக 18 விற்பனை நிலையங்களை திறந்து, அவற்றின் மொத்த எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு “குறிப்பிட்ட காலகட்டத்தில் சராசரியாக ஏற்படும் வாங்குபவர்களின் வளர்ச்சியை காட்டிலும், கடந்த காலாண்டில் அதிகமாக இருந்தது. காலாண்டு முழுவதும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்தபோதிலும், ஏப்ரலில் அக்‌ஷய திரிதியா மற்றும் ஜூன் மாதத்தில் திருமணங்களுக்கான நகை விற்பனை வலுவாக இருந்தது. தங்கம் மற்றும் கல் பதியப்பட்டவை விற்பனையில் முக்கிய பங்கு வகித்தன” என டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.