தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது அசாத்தியமான திரைக்கதையால் மக்கள் மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர். வெற்றிமாறனின் இயக்கத்தில் நாளை வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'விடுதலை'. 


 



உண்மை சம்பவத்தின் அடிப்படை :


ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ராட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். நடிகர் சூரி நகைச்சுவை நடிகரில் இருந்து அடுத்த பரிமாணமாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


மேலும் இப்படத்தில் கௌதம்மேனன், ராஜீவ்மேனன், சேத்தன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது 'விடுதலை' திரைப்படம் என கூறப்படுகிறது. வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக்கட்டையை பதுக்கியிருப்பதாக கூறப்பட்டு வீடு வீடாக காவல்துறையினர், வனத்துறையினர், வருவாய் துறையினர் என பெரும் படையே வீடுகளுக்குள் புகுந்து சோதனை செய்தனர். விசாரணை என்ற பெயரில் அவர்களை சரமாரியாக அடித்து கொடுமை செய்தனர். 18 பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தினர். ஒட்டுமொத்த கிராமத்தையும் அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலைய வைத்தது வாச்சாத்தி கலவரம். 


வாச்சாத்தி கலவரத்தின் தழுவல் :


1992ம் ஆண்டு நடைபெற்ற அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' நாவலை  அடிப்படையாக கொண்டு விடுதலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த நாவலில் சந்தன கடத்தலுக்கு பதிலாக  கள்ளச்சாராயம் காச்சியதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து கிராமத்தை அழித்ததாக கூறப்பட்டு இருக்கும்.


மையக்கதை:


காவல்துறை கிராமத்தை சூறையாடியதையும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததையும் தாங்க முடியாமல் மக்கள் படை உருவாக்கி அதற்கு தலைவனாக வாத்தியார் உருவானதாக கூறப்பட்டு இருக்கும். அதிகாரம் படைத்தவர்கள் அவர்களுக்கு கீழே உள்ள மக்களை அடிமையாக வைத்து கொள்ள, பயம் என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து கொள்கிறார்களோ அதை அவர்களுக்கு திருப்பி கொடுப்பதன் மூலம் தான் அடிமை தனத்தை முழுவதுமாக ஒழிக்க முடியும் என்பது போன்ற அனல் தெறிக்கும் வசனங்கள் அந்த நாவலில் இடம் பெற்று இருக்கும். வாத்தியாரை சுட்டு கொல்வதற்காக கடைநிலை காவல்துறை அதிகாரியான மாணிக்கம் என்பவரை ட்ரெயின் செய்கிறார்கள். அவர் எப்படி வாத்தியாரை சுட்டு கொல்கிறார் என்பது தான் நாவலின் மைய கதை. 


இந்த நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படத்தில் கோனார்  வாத்தியார் என்ற கதாபாத்திரம் தான் விஜய் சேதுபதி நடிக்கும் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம். மேலும் மாணிக்கம் என்ற கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் குமரேசனாக சூரியும் நடித்துள்ளனர்.  



முந்தைய வெற்றிகளை முறியடிக்குமா?


ஏற்கனவே 'லாக்கப்' என்ற நாவலை தழுவி விசாரணை திரைப்படத்தையும், 'வெக்கை' நாவலை தழுவி 'அசுரன்' திரைப்படத்தையும் இயக்கிய வெற்றிமாறன் அடுத்ததாக 'துணைவன்' நாவலை தழுவி 'விடுதலை' திரைப்படத்தை இயக்கி உள்ளார். 'விசாரணை' திரைப்படம் தேசிய விருது மற்றும் சர்வதேச விருதுகளை குவித்ததை தொடர்ந்து அசுரன் திரைப்படமும் தேசிய விருது பெற்றது.


வெற்றிமாறன் அறிமுகமான ஆடுகளம் திரைப்படமும் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதை குவித்தது. இப்படி பொழுதுபோக்கு அம்சத்தை  மட்டுமே கையாளாமல் திரைப்படம் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படங்களை இயக்கும் வெற்றிமாறனின் இந்த விடுதலை திரைப்படம் மூலம் அதிகாரவர்க்கத்தின் அடிமைத்தனத்தை தோலுரித்து காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   


பெரிய பட்ஜெட்டுக்கு இழுத்தது :


சுமார் நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் கதைக்களம். சிறிய பட்ஜெட் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது பின்னர் பெரிய அளவு பட்ஜெட்டில் எடுத்து முடிக்கப்பட்டது என்பதால் வெற்றிமாறனின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஹைப் இருக்கும். அந்த வகையில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் முதல் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகிறது.