கடந்த மார்ச் மாதம், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் பல நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், மற்றும் ஹாலிவுட் கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர். நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தை நகைச்சுவை நடிகர் க்ரிஸ் ராக் கேலி செய்ததை அடுத்து, வில் ஸ்மித் மேடைக்கு வந்து கிறிஸின் முகத்தில் அறைந்தார்.


அன்று இரவே சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார். வில் ஸ்மித்தின் இந்த செய்கை அனைத்துலக திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவருக்கு ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. 


வில் ஸ்மித், க்ரிஸ் ராக்கை அறைந்த செய்தி, உலக மக்களிடையே காட்டுத்தீ போல பரவியது. வில் ஸ்மித்தின் இந்த செய்கைக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். பலரது கண்டனங்களையடுத்து, வில் ஸ்மித்  தனது செயலுக்காக நடிகர் க்ரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது மட்டுமன்றி, அவர் கலந்து கொள்ளும் நேர்காணல்களிலும் ஆஸ்கர் நிகழ்ச்சியில் நடந்த அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து வருகிறார். வில் ஸ்மித்தின் எமான்ஸிபேஷன் என்ற படம் வெளியாகவுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட நேர்காணல் நிகழ்ச்சியில் ஆஸ்கரில் நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார் வில் ஸ்மித். 




“பல நாட்களாக அடைத்து வைத்திருந்த கோபம்..”


எமான்ஸிபேஷன் படத்திற்கான நேர்காணலில் கலந்து கொண்ட வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் நிகழ்வு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையான இரவு அது. பல நாட்களாக அடக்கி வைத்திருந்த கோபங்கள் அனைத்தும், அன்று அந்த வகையில் வெளிப்பட்டுவிட்டது. சிறு வயதில், எனது அப்பா என் அம்மாவை அடிப்பதைப் பார்த்துள்ளேன், அவையெல்லாம் சேர்ந்து அன்று வெடித்து விட்டது. ஆனால், நான் அப்படிப்பட்ட மனிதனாக இருக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். 


மேலும் பேசிய வில் ஸ்மித், 9 வயதான தனது அண்ணன் மகன், க்ரிஸ் ராக்கை அறைந்தது குறித்து தன்னிடம் கேள்வியெழுப்பியபோது, தான் மிகவும் உடைந்து விட்டதாக கூறியுள்ளார். தான் சிறுவயதில் பார்த்த சம்பங்களால் ஏற்பட்ட கோபம் ஆஸ்கர் மேடையில் அவ்வாறு வெளிப்பட்டதை எண்ணி தற்போது வருந்தும் வில் ஸ்மித், இதற்கு முன்னரும் தனது சிறு வயதை நினைவு கூர்ந்துள்ளார். 




“எனக்கு 9 வயது இருக்கும். அப்பொழுது என் அப்பா, என் அம்மாவின் தலையின் ஒரு பகுதியில் குத்துவதை பார்த்தேன். அவர் அடித்ததால் என் அம்மா வாயிலிருந்து ரத்தமாக துப்பினார். அன்றிலிருந்து நான் சாதித்த விருதுகள், நட்சத்திர அங்கீகாரம் ,கதாபாத்திரங்கள், சிரிப்புகள் எல்லாமே என் அம்மாவுக்காகத்தான். இதன் வாயிலாகத்தான் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்க முடிவு செய்தேன். அன்னைக்கு நடந்த சம்பவம்தான் நான் யார்னு எனக்கு உணர்த்தியது..


அன்றைக்கு என்னால் அம்மாவுக்காக என் அப்பாவை எதிர்த்து நிற்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியால் நான் என்னை ஒரு கோழையாக உணர்ந்தேன். நீங்கள் என்னைப்பற்றி புரிந்துகொண்டது மென் இன் பிளாக் படத்தில் ஏலியனை அழிக்கும் வில்ஸ்மித் ஒரு ஸ்டார் என்று, ஆனால் என்னை நானே பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிய கட்டிடம் அந்த ஸ்டார் வேல்யூ. உலகத்திலிருந்து என்னை மறைக்க ஒரு கோழையை மறைக்க உருவாக்கியது. உண்மையில்  பயத்திற்கு  நாம் எந்த மாதிரி பதிலளிக்க விரும்புகிறோமோ அப்படியாகத்தான் மாறுகிறோம்” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.