தற்போது ஆஸ்கர் விருதுகள் விழாவில் தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து பேசுபொருளாகி இருக்கிறார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இவர் கடந்த 1989ஆம் ஆண்டு, கிராமி விருதுகளைப் புறக்கணித்து பேசுபொருளாக மாறியவர். இசைத்துறையின் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ரெக்கார்டிங் அகாடமியின் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இசைத்துறையில் மிக உயரிய விருதாக கிராமி கருதப்படும் நிலையில், அமெரிக்காவின் பொழுதுபோக்குத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளுள் ஒன்றாகவும் கிராமி விருதுகள் கருதப்படுகின்றன.
Parents Just Don't Understand என்ற பாடலில் சிறந்த ராப் பாடலுக்காக 1989ஆம் ஆண்டு நடைபெற்ற 31வது கிராமி விருதுகளுக்காக வில் ஸ்மித், டிஜே ஜாஸ்ஸி ஆகிய இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. எனினும், இந்த இருவரும் கிராமி விருது வழங்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளனர். சிறந்த ராப் பாடல் என்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பிரிவு தொலைக்காட்சியில் காட்டப்பட்டாது எனக் கூறப்பட்டதால், இருவரும் இந்த விழாவைப் புறக்கணித்ததாகக் காரணம் சொல்லப்பட்டிருந்தது.
கிராமி விருதுகள் பெறுவதையோ, கிராமி விருதுகள் குறித்தோ தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனக் கூறிய நடிகர் வில் ஸ்மித், அப்போதைய விருதுகள் விழாவின் வடிவமைப்பில் பிரச்னை கொண்டிருப்பதாகவும், இந்த விழாவைப் புறக்கணிப்பதன் மூலமாக அதன் நிர்வாகிகளின் `முகத்தில் அறைந்ததைப்’ போல செய்ய முடியும் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
அவருடைய நண்பரான டிஜே ஜாஸ்ஸி இதுகுறித்து கூறும் போது, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவர்கள் இருவரிடமும் அனைத்து பிரிவுகளையும் தொலைக்காட்சியில் காட்ட முடியாது எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் பிரிவில் அந்த ஆண்டின் கிராமி விருதுகளை வில் ஸ்மித் - டிஜே ஜாஸ்ஸி குழு தட்டிச் சென்றது.
கிராமி விருதுகளை வென்றவுடன், நடிகர் வில் ஸ்மித் செய்தியாளர்களிடம் விருதுகளை ஏற்றுக் கொள்வதில் கூடுதலான மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளர். எனினும், தாங்கள் விருது பெறும் பகுதி தொலைக்காட்சியில் காட்டப்படாததில் வருத்தம் எனத் தெரிவித்த அவர், இந்த வருத்தம் தாங்கள் விருது பெற்ற மகிழ்ச்சியான உணர்வைக் குறைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். தான் கிராமி விருதுகள் வழங்கும் விழாவைப் புறக்கணித்தது குறித்து தனக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் நடிகர் வில் ஸ்மித்.
மேலும், ராப் இசை குறித்து ரெக்கார்டிங் அகாடமிக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய வில் ஸ்மித், தங்களின் புறக்கணிப்பின் மூலம், ராப் இசை மீதான கவனம் அதிகரித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் கிராமி விருதுகள் விழாவில் கலைஞர்கள் ராப் பாடல் பாடுவது, அது தொலைக்காட்சியில் இடம்பெற்று பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சென்று சேர்வது ஆகியவை ஏற்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். வில் ஸ்மித் தொடர்ந்து 1992, 1998, 1999 ஆகிய ஆண்டுகளிலும் கிராமி விருதுகளை வென்றுள்ளார்.