வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.


லோக்கல் சரக்கு:


வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, நடிகை வனிதா விஜயகுமார்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, இணைச் செயலாளர் செளந்தரரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.


உதயநிதியுடன் நடிக்காதது ஏன்?


இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.சேகர், "உதயநிதி ஹீரோவாக நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் என்னை நடிக்க இயக்குநர் அனுகினார். அப்போது அவரிடம், நான் பா.ஜ.க, அவர் திமுக, நான் நடிப்பது அவருக்கு சம்மதமா? என்று அவரிடம் கேளுங்க என்றேன். அதற்கு அவர், ”உங்களோடு இணைந்து நடிப்பதில் உதயநிதி சாருக்கு சம்மதம்,  நீங்க என்ன சொல்வீங்க என்று தான் அவர் கேட்க சொன்னார்” என்று சொன்னார். இது தான் நெறிமுறை.


அரசியல் வேறு, சினிமா வேறு என்பதை அவர் எவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். ஆனாலும் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை, அதற்கு இயக்குநர் தான் காரணம். நான், இது தொடர்பாக நடிகர் சித்தார் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறேன், அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.


மேலும், "இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காக என்னை சந்தித்தார். அப்போது ‘கடைசி தோட்டா’ படத்தை பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா என்று தான் நினைத்தேன். ஆனால், உள்ளே வந்த பிறகு தான் ‘லோக்கல் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்தேன். சரக்குக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை.


மது, சிகரெட்:


இதுவரை என் வாழ்வில் ஒரு துளி கூட மதுவை அருந்தியதில்லை, அதேபோல் சிகரெட் புகைத்தது இல்லை. இரண்டு படங்களில் மட்டும் மது குடிப்பது போல் நடித்தேன், பிறகு அது கூட தேவையில்லை என்று விட்டுவிட்டேன். நமக்கு பழக்கம் இல்லாத விசயங்களை பெரிய திரையில் எதற்காக செய்ய வேண்டும், அதை பார்த்து இரண்டு பேர் கெட்டுப்போக கூடாது என்பதற்காக அதை விட்டுவிட்டேன்.


மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல கூடிய ஒரு படமாக இந்த படம் இருக்க வேண்டும். அதே போல், தம்பி தீனா சொன்னது போல், ஹாங்கோவராகி மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க வேண்டும், அதே சமயம் ஹாங்கோவர் ஆகி தியேட்டரிலேயே தூங்கி விடாமலும் இருக்க வேண்டும்" என்றார் எஸ்.வி. சேகர்.