'அடுத்த சூப்பர்ஸ்டார் யார்' என்கிற சர்ச்சை கோலிவுட்டில் மீண்டும் எழுந்துள்ளது. யார் சூப்பர் ஸ்டார் என்று கேட்பதற்கு முன்னால், தற்போது மக்கள் கேட்டுவரும் மற்றொரு முக்கியமான கேள்வி சூப்பர் ஸ்டார் என்பது நடிகர்களுக்கான புரோமஷனா? இல்லை அடையாளமா?


சூப்பர் ஸ்டார் பந்தயம்


எப்படியாவது அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்பது மட்டுமே சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரின் லட்சியமாக இருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருக்காது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இளம் நடிகர் வளர்ந்து வரும் சூழலிலும், சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ரஜினிகாந்த்.


அந்த இடத்தை சென்றடைவது அசாத்தியம் என்று தெரிந்த பின் ஒவ்வொரு நடிகரும் தனக்கென லிட்டில் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, தல, புரட்சித் தளபதி, டாப் ஸ்டார், கேப்டன், மக்கள் செல்வன், சின்ன தளபதி என அவரவருக்கான பட்டங்களை வரையறுத்துக் கொண்டார்கள். ஆனால்  இந்தப் பட்டங்களை சூட்டிக்கொண்ட நடிகர்கள், நாளடைவில் அந்தப் பட்டத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் சென்ற காலமும் நம் கண் முன்னே கடந்திருக்கிறது.


 ஏன் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார்?


தனது கரியரை வில்லனாகத் தொடங்கியவர் ரஜினி. அதை அவர் திறம்பட நடித்து மக்களிடையே ஒரு வில்லனாக உருவெடுத்திருந்தார். ஆனால் அவரது வில்லன் இமேஜ்,  மற்ற கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதற்கு சவாலாக இருந்தது. பைரவி படத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கும் எண்ணத்தில் தாணு அவருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்தார்.


இவ்வளவு சின்ன வயதில் தனக்கு இவ்வளவு பெரிய பட்டம் வேண்டாம் என்று ரஜினி மறுத்திருக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை தனது தகுதிக்கு மீறிய அடையாளத்தை சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ரஜினி.  நாளடைவில் அதை மக்கள் மறந்திடலாம் என்று கூட அப்போது அனைவரும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட அடையாளத்துக்கு நிகராக தன்னை வளர்த்துக் கொண்டார் ரஜினி. இதற்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு அபாரமானது!


ரஜினிக்கு  இருந்த சவால்கள்


ரஜினி நடிகராக உருவான காலத்தில் நடிகர்களுக்கு நிறைய சவால்கள் இருந்தன. அவர்களிடம் இருந்து பல திறமைகள் எதிர்பார்க்கப்பட்டன. நன்றாக நடனம் ஆடுவது, ஸ்டண்ட் செய்வது, இயக்குநர்களுக்கு உதவியாளர்களாக இருப்பது என்று அவர்களிடம் ஒரே சமயத்தில் எல்லா வேலைகளும் எதிர்பார்க்கப்பட்டன. ரஜினிக்கு இணையாக கமல் பல்வேறு தளங்களில் தனது திறமைகளை நிரூபித்துக் கொண்டிருந்தார்.


அதே பேட்டர்னை தான் அன்றைய சூழலில் மற்ற நடிகர்களும் பின்பற்றினார்கள். ஆனால் இன்று அவர்களில் பாதி பேர் அடையாளம் தெரியாமல் மறைந்துவிட்டார்கள். ஆனால் ரஜினி தன் மேல் நம்பிக்கை வைத்தார். தன்னால் எதை புதிதாக நிகழ்த்த முடியுமோ அதை செய்தார். சாதாரணமான செய்கைகளை தனது ஸ்டைல் மூலமாக அசாதரணமாக தோன்ற வைத்தவர்.


புரோமோஷனா…? அடையாளமா ?


ரஜினியைவிட திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். அவரைவிட நன்றாக டான்ஸ் ஆடுபவர்கள் இருக்கிறார்கள். அவரைவிட வசூலை அள்ளிக் குவிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள். இளம் வயதில் தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்கள், நல்ல அரசியல் தெளிவுள்ள நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் என்கிற பெயரைச் சொன்னால் ஒரு மனிதரின் நடையும், சிரிப்பும் அவர் ஸ்டைலாக கண்ணாடி மாட்டும் விதமும்  ஓடுவதும் என கருப்பு நிறத்தவரான இந்த ஒரு நடிகர் மட்டுமே கோலிவுட் ரசிகர்கள் கண் முன் வருகிறார்.


நடிகர்களின் உச்சம் எல்லா நடிகர்களைவிடவும் சிறந்தவர் என்பதை சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் சுட்டிக்காட்டாமல், ஒரு நடிகர் தனது வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பால் ஈட்டிய ஒரு அடையாளமாகக் கூறப்பட்டால், சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு ரஜினி முழுமையிலும் முழுமையாக தகுதியானவர். ரஜினியின் திரை வாழ்க்கையைத் தவிர்த்து அவரது பெயருக்கு பின் இருக்கும் பட்டத்தை மட்டுமே சூடிக்கொள்ள நினைப்பது ஒரு அதிகார போட்டியை வளர்ப்பதாக மட்டுமே இருக்கும்.