அண்மையில் யாரும் எதிர்பார்க்காத விஷயம் சினிமா உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது இளையராஜா கங்கை அமரன் சந்திப்பு.. கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இவரும் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்க.. ஆமாம் இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்ற காரணத்தை நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அந்தக் காரணத்தை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.  


வாக்குவாதமான உரையாடல் 


இது குறித்து கங்கை அமரன் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம் பாடலில், அதோ அந்த நதிக்கரையில் ஒரு காதலர் மாடம் என்று பாடியிருந்தார் இளையராஜா.. ”நதியோரம் இளம் காதலர் மாடம், இதோ இந்த வனமெங்கும் காதலர் கூடம்”இருக்கட்டும் என்றேன்.. உடனே ஏன் அங்க உனக்கு இடிக்குதா என்றார். பாட்டு வரிகள் சரியா இல்லை என்றேன். உடனே அவர் நான் எது சொன்னாலும் அதை மாத்திக்கிட்டே இருப்பாயா என்றார். உடனே நான் வேண்டுமென்றால் வைத்துக்கொள் இல்லை என்றால் விடு என்று சொல்லிவிட்டு வந்தேன். அங்குதான் விரிசல் ஆரம்பித்தது..




எப்போதுமே நான் இளையாராஜா, பாஸ்கர் மூன்று பேரும் மதிய உணவுக்கு பிரசாத் ஸ்டியோவில் அமர்ந்து உண்பது வழக்கம். அப்படி ஆணென்ன பெண்ணென்ன பாடல் உருவாக்கத்தின் போது, மூன்று பேரும் சந்தித்து சாப்பிட திட்டமிட்டிருந்தோம்.


அந்த சமயத்தில் அவர் வீட்டில் இருந்து தனியாக சாப்பிடுங்கள்.. அப்பத்தான் உடம்பில் ஒட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் பாஸ்கரும் வழக்கம் போல அங்கு சென்ற போது, ராஜா எங்களை தனியாக அமர்ந்து சாப்பிடுமாறு சொன்னார்.




உடனே நான் சோறுக்காகத்தான் இங்கு வருகிறேன் என்று நினைக்கிறாயா.. இந்த ஒரு நேரத்தில்தான் அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் அமர்ந்து உண்கிறோம். உன்னை பார்க்க வேண்டும், கலாய்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வருகிறோம். அந்தக் கோபத்தில்தான், ஆணென்ன பெண்ணென்ன பாடலை எழுதினேன். அதை அப்படியே அவர் முன்னால் தூக்கிப்போட்டுவிட்டு இதை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள் என்று கூறி விட்டு வந்தேன்.


அதே போல அரண்மனைக்கிளி பாட்டில்,  “அரண்மனைக்கிளி அழகு பைங்கிளி தரையில் வந்ததடி” என்று எழுத சொன்னார்.  நான் அது அசிங்கமாக இருக்கிறது என்று அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் என அதை மாற்றி எழுதினேன்.  மேலும் நீ சொல்வது போன்று எழுதினால், அரண்மனை தனியாக கிளி தனியாக செல்கிறது.. அது பாடும்போது நக்கிளி நக்கிளி என்று கேட்கும்.. என்று சொன்னேன். அப்படி நான் தொடர்ந்து பேசி வந்தது அவருக்கு பிடிக்க வில்லை. அதைபோல அவரை புகழ்பவர்கள் மத்தியில் நான் மட்டும் அவரை குறை கூறிக்கொண்டே இருந்தேன். அப்படி அந்த விரிசல், பிரிவாக மாறிவிட்டது” என பிரிவுக்கான காரணத்தை அடுக்கினார்.