நடிகை கஜோல் மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள அனன்யா கட்டிடங்களில் இரண்டு புதிய வீடுகளை வாங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான தகவல்களின்படி, இந்த இரண்டு வீடுகளின் மொத்த விலை 11.95 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு வீடுகளும் கட்டிடத்தின் 10வது மாடியில் இடம்பெற்றுள்ளன. 


இந்த வீடுகளைக் கடந்த ஜனவரி மாதத்தில் நடிகை கஜோல் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை கஜோல் தற்போது வசித்து வரும் வீடான `ஷிவ் ஷக்திக்கு’ அருகிலேயே இந்த இடமும் அமைந்துள்ளது. ஹ்ரித்திக் ரோஷன், அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் ஜூஹூ பகுதியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. 



கஜோல்


நடிகை கஜோல் வாங்கியிருக்கும் வீட்டின் மொத்த பரப்பளவு சுமார் 2 ஆயிரம் சதுர அடிகள் எனக் கூறப்படுகிறது. இந்த வீடுகளுக்கான பத்திரத்தில் கஜோல் விஷால் தேவ்கன் என்ற பெயரில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ஷிவ் ஷக்தி என்ற இல்லத்தை நடிகை கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் சுமார் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த வீடு சுமார் 5300 சதுர அடி பரப்பளவு கொண்டது. மேலும், ஜூஹு பகுதியில் உள்ள கபோல் கூட்டுறவு வீட்டு வாரியத்தில் உள்ள அஜய் தேவ்கனின் `ஷக்தி’ என்ற வீட்டிற்கு அருகிலேயே இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டின் முன்னாள் உரிமையாளரான மறைந்த புஷ்பா வாலியாவும், நடிகர் அஜய் தேவ்கனும் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீடு விற்பனை குறித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், இதன் பத்திரப்பதிவு கடந்த 2021ஆம் ஆண்டு மே 7 அன்று நடைபெற்றுள்ளது. 



தன் கணவர் அஜய் தேவ்கனுடன் கஜோல்


கடந்த ஆண்டு, நடிகை கஜோல் மத்திய மும்பையில் உள்ள பொவாய் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டை மாதம் 90 ஆயிரம் ரூபாய் என்ற தொகைக்கு வாடகைக்கு அளித்துள்ளார். இந்த வீடு சுமார் 771 சதுர அடிகள் கொண்டது எனவும், ஹிராநந்தனி கார்டன்ஸ் பகுதியில் உள்ள அட்லாண்டிஸ் ப்ராஜெக்டின் 21வது மாடியில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று, இந்த வீட்டுக்கான வாடகை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது. இங்கு தற்போது குடியிருப்பவர்கள் முன்பணமாக 3 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர். ஒரு ஆண்டிற்குப் பிறகு, இந்த வீட்டின் வாடகைக்கான தொகை மாதம் ஒன்றிற்கு 96,750 ரூபாய் என நிர்ணயிக்கப்படும். 


நடிகை கஜோல் கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான `த்ரிபங்கா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த வாரம் நடிகை ரேவதி இயக்கி வரும் `சலாம் வெங்கி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகளிலும் நடிகை கஜோல் கலந்து கொண்டார். இந்தத் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.