2 ஆம் ஆண்டில் நுழைந்த விஜயின் தவெக
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தனது அரசியல் கட்சி தொடங்கி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அதன் பெயரை அறிவித்தார். கட்சி அறிவித்த இந்த ஓராண்டு காலத்தில் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து மக்களிடையில் தனது அரசியல் நிலைப்பாட்டை மிக தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார் விஜய்.
நேற்று பிப்ரவரி 2 ஆம் தேதி தவெக தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றது. இதனை முன்னிட்டு தவெக-வின் பனையூர் அலுவலகத்தில், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலருடன், கட்சியின் ஐம்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கட்சியின் 2ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் விஜய், கழக கொடியை ஏற்றிவைத்தபின், ஐம்பெரும் தலைவர்களின் சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தவெக விழாவில் வெற்றிமாறன் கலந்துகொண்டது ஏன் ?
பனையூர் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தவெகவின் ஓராண்டு நிறைவரை கொண்டாட நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அந்த வகையில் மதுரையில் தவெக கட்சியினர் சார்பாக மாட்டு வண்டி பந்தையம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். இதில் மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, சிறிய மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் விஜய் அண்பன் கல்லாணை தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு எல் இ டி டிவி பீரோ கிரைண்டர் மிக்ஸி ஃபேன் கட்டில் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் இறை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். இந்த மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலை ஓரங்களில் நின்று பார்த்து ரசித்தனர்.
இந்தநிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக வளைதளங்களில் வெற்றிமாறன் கலந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து தவெகவில் வெற்றிமாறன் இணையபோகிறாரா? அல்லது 2026 தேர்தலில் விஜய்-க்கு ஆதரவு தர போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் வெற்றிமாறன் அடுத்தபடியாக இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கான பணியாக மதுரையில் இருந்ததாகவும் இதனால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.