“நாங்க வேதனையில் இருக்கோம்”.. வெட்டப்படும் பனைமரங்களை கண்டு விவசாயிகள் கண்ணீர்
வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக வேறு மரங்கள் நட்டாலும் அது பயன்தரும் மரங்களாக இருப்பதில்லை. எனவே இதேபோன்று பனைமர விதைகள், பயன்தரும் மரங்களை நட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்: நான்கு வழிச்சாலைக்காக நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதை கண்டு விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். இது வேறு எங்கேயும் இல்லைங்க. தஞ்சை மாவட்டத்தில்தான்.
தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ராட்சத புளியமரங்கள், வேப்பமரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலை துறை கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சாலையின் அகலம் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. பொதுமக்கள் மற்றும் சாலை உபயோகிப்பாளர்களின் தேவையை உணர்ந்து இந்த சாலையை அகலப்படுத்த தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பாக இந்த சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த முடிவு செய்தது.
நெடுஞ்சாலைத்துறை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நெடுஞ்சாலைத்துறையின் தஞ்சை மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட பகுதியில் மட்டும் 33 கி.மீ. நீளமும், இதர பணிகள் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் தஞ்சை உட்கோட்டம் சார்பிலும், ஒரத்தநாடு உட்கோட்டம் சார்பிலும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் தஞ்சை மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் அமைப்பது, சாலையில் பாலம் கட்டுவது, அகலப்படுத்துவது என 5 ஆண்டு திட்டத்துக்கு ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4-வது ஆண்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை- பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை தொடங்கும் இடமான கீழவஸ்தாசாவடியில் உள்ள சுற்றுவட்ட சாலை பாலம் அருகில் இருந்து பணிகள் தொடங்குகின்றன.
தற்போது இந்த பணிகளுக்காக சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்கள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான பனைமரங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலான புளியமரங்கள், வேப்பமரங்கள் மற்றும் புங்கன்மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது. இந்த மரங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி பெற்று வெட்டப்பட்டு வருகின்றன.
சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் தற்போது வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்பு வசதியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் சோலையாக காணப்பட்ட அந்த பகுதி வெட்ட வெளியாக காட்சி அளிக்கிறது. சாலையின் இருபுறமும் மரங்கள் அதிக அளவில் நடப்பட்டு நிழல்தரும் இடமாக காட்சி அளித்த சாலை தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் வெட்ட வெளியாக காட்சி அளித்து வருகிறது. முக்கியமாக மண்வளத்தை மேம்படுத்தும் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதை கண்டு விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். இதற்கு பதில் இந்த மரங்களை வேரோடு அகற்றி வேறு எங்காவது ஊன்றி இருக்கலாமே என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படுவது நியாயம்தானே என்றும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். இப்படி மரங்கள் வெட்டப்பட்டு சாலை 15 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. பின்னர் சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு தார்சாலை போடப்பட உள்ளது. தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே மொத்த தூரம் 47 கி.மீ. ஆகும். இதில் தஞ்சை மற்றும் ஒரத்தநாடு உட்கோட்டம் சார்பில் மட்டும் 33 கி.மீ. தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மீதமுள்ள பணிகள் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
தஞ்சை - பட்டுக்கோட்டை 4 வழிச்சாலைத்திட்டம் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தஞ்சை உட்கோட்ட பகுதியில் சூரக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று ஒரத்தநாடு பகுதிகளிலும் சாலை விரிவுபடுத்தப்பட்டு போடப்பட்டுள்ளது. தற்போது தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை தொடங்கும் இடத்தில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படும் மற்றும் மின்கம்பங்கள் மாற்றும் இடங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் மரங்கள் வெட்டப்பட்டு சாலை போடப்பட்ட இடத்தில் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு மரம் வெட்டிய இடத்தில் அதற்கு பதிலாக 10 மரங்கள் வீதம் நடப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு நன்றாக வளர்ந்துள்ளன. தற்போது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாகவும் மரங்கள் நடப்படும். இந்த பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக வேறு மரங்கள் நட்டாலும் அது பயன்தரும் மரங்களாக இருப்பதில்லை. எனவே இதேபோன்று பனைமர விதைகள், பயன்தரும் மரங்களை நட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.