தமிழ் சினிமா எப்போதும் மாற்று சிந்தனையாளர்களை கொண்டாடியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதே அளவிற்கு அந்த படங்களின் இயக்குநர்களும் கொண்டாடப்படுகிறார்கள். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் தொடங்கி , பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்தினம் என அவரவர் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகின்றனர். அவர்களின் மாறுபட்ட அணுகளை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.கடந்த 2007-ஆம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற ஹிட்  திரைப்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் வெற்றி மாறன். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தால் அடுத்தடுத்த பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டில் வழக்கமான அதிரடி காட்சிகளை படமாக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் , நிறுத்தி நிதானமாக பயணிக்கும் இயக்குநராய் வேறுபடுகிறார் வெற்றிமாறன்.




பொதுவாக ஒரு இலக்கிய தழுவலை மக்களிடம் கொண்டுசெல்வது  அவ்வளவு எளிதான காரியமல்ல. இயக்குநர் மகேந்திரனுக்கு பிறகு அதனை லாவகமாக கையாளுகிறார் வெற்றி மாறன். திரைத்துரையில் கால் பதித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை ஐந்துதான். ஆனால் அத்தனையும் செம ஹிட். அதுமட்டுமல்லாமல் பல விருதுகளையும் வாங்கி குவித்தன. எடுத்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் தனுஷ் கூட்டணிதான். பொல்லாதவனுக்கு பிறகு ஆடுகளம் அதன் பிறகு வட சென்னை, அசுரன் என நான்கு படங்களில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே செம ஹைப்தான்.


இந்நிலையில் சமீபத்தில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் வெற்றி மாறனிடம்  “தொடர்ந்து தனுஷோடு பயணிப்பது எப்படி இருக்கிறது ?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ எனக்கு தனுஷோடு பயணிப்பது வசதியாக இருக்கிறது. நான் ஒரு ஸ்கிரிப்ட் பண்ணும் பொழுது என்னோட உருவத்திற்கு, என்னால என்ன பண்ண முடியுமோ அதைத்தான் எண்ணத்துல வச்சிருப்பேன்.அது சரியா தனுஷுக்கு  செட் ஆகிடும். அதுமட்டுமல்லாம நான் கொடுக்குற இன்புட்ஸ் அவர்கிட்ட இருந்து நல்லா வரும் அங்கேயே எனது பாதி வேலை முடிஞ்சாச்சு“ என நடிகர் தனுஷை புகழ்ந்துள்ளார் இயக்குநர் வெற்றி மாறன். இந்த வீடியோவை மலையாள நடிகை அன்னா பென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து. ஃபேன் கேர்ள் என குறிப்பிட்டுள்ளார்.


அடுத்ததாக 'வடசென்னை' படத்தின் முன்கதையை வைத்து பிரம்மாண்ட வெப் சீரிஸ் ஒன்றைத் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன். வட சென்னை படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என செய்திகள் வெளியானது. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் , தற்போது அந்த படத்தின் முன்கதையை கையில் எடுத்துள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன்.  வட சென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோரின் இளம் பருவத்தை படமாக்கவுள்ளாராம் இயக்குநர்.  இதில் அமீரின் சிறுவயதுக் கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.