தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு இந்த விருது வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், சைமா விருதுகள் வழங்கும் விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில், 2019ம் ஆண்டிற்கான சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த தமிழ் திரைப்பட வில்லனாக கைதி திரைப்படத்தில் நடித்ததற்காக அர்ஜூன் தாசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகர் விருது கைதி திரைப்படத்தில் நடித்ததற்காக ஜார்ஜ் மரியானுக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்தில் நடித்ததற்காக இந்துஜா ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் சிறந்த அறிமுக இயக்குனர் விருதை கோமாளி படத்தை இயக்கியதற்காக பிரதீப் ரங்கநாதன் பெற்றார். சிறந்த அறிமுக நடிகராக அசுரன் படத்தில் நடித்ததற்காக கருணாசின் மகன் கென் கருணாசிற்கு வழங்கப்பட்டது. ஆடை படத்தை தயாரித்த வி ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருது வழங்கப்பட்டது.
சிறந்த இசையமைப்பாளர் விருது அஜீத் நடித்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பின்னணி பாடகி விருது அசுரன் படத்தில் இடம்பெற்ற எல்லு வய பூக்களே பாடலை பாடிய பாடகி சைந்தவி பிரகாஷிற்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியர் விருது விஜய் நடித்த பிகில் படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடலுக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளர் விருது அசுரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த மலையாள பட இயக்குனராக ஜல்லிக்கட்டு படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெலிசெரிக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு படத்தின் சிறந்த நடிகராக மகரிஷி படத்தில் நடித்ததற்காக மகேஷ்பாபுவிற்கு வழங்கப்பட்டது. டியர் காம்ரேட் படத்தில் நடித்ததற்காக ராஷ்மிகா மந்தனாவிற்கு விருது வழங்கப்பட்டது. ஜெர்ஸி மற்றும் கேங் லீடர் படத்தில் நடித்ததற்காக நானிக்கு விருது வழங்கப்பட்டது.
கன்னட திரையுலகில் யஜமானா படத்தை இயக்கிய ஹரி கிருஷ்ணன், பொன்குமரனுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது. சிறந்த கன்னட திரைப்பட வில்லனாக பரதே படத்தில் நடித்ததற்காக சாய்குமாருக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளராக யஜமான படத்திற்கு இசையமைத்த ஹரிகிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. கன்னட திரையுலகின் சிறந்த படமாக யஜமானா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகனாக யஜமானா படத்தில் நடித்த நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க : Survivor Tamil: விக்ராந்த்-காயத்ரி மோதல்...வெளியேறும் ராம்... நெகிழ்ந்து போன ரவி...! சத்தமாக சர்வைவர்!