திரை நட்சத்திரங்களுக்கு பொருத்தமான பெயர்களை டைட்டிலாக சூட்டி அழைக்கப்படுவது என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு பழக்கம். அந்த வகையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தல அஜித், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என மக்கள் திரை நட்சத்திரங்களை அவர்களுக்கு பொருத்தப்பட்ட டைட்டிலுடன்  அடையாளப்படுத்துகிறார்கள். 


சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது எப்படி?


அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்திற்கு 'சூப்பர் ஸ்டார்' என்ற டைட்டில் எப்படி வந்தது என்பதை பற்றிய சுவாரஸ்யமான தகவலை பார்க்கலாம். அது இதுவரையில் யாருக்கும் கிடைக்காத ஒரு மேஜிக்கல் மொமெண்ட். 


 



'சூப்பர் ஸ்டார்' டைட்டில் காரணம்: 


எம்.பாஸ்கர் இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளியான 'பைரவி' படத்தில் தான் முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்த்துக்கு 'சூப்பர் ஸ்டார்'  டைட்டில் போடப்பட்டது. இதை அவருக்கு கொடுத்தவர் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கலைப்புலி.எஸ்.தாணு. ரஜினிகாந்த் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ இல்லை என்றாலும் தனித்துமான திறமை கொண்ட ஒரு நடிகர் என்பதை உணர்ந்த கலைப்புலி.எஸ். தாணு கண்களை  கவரும் அட்டராக்ட்டிவ் போஸ்டர்களை பிரமாண்டமான முறையில் வைத்து மக்களின் கவனத்தை பெற வேண்டும் என முடிவு செய்தார். 


பிரமாண்டமான போஸ்டர் : 


சென்னையில் 'பைரவி' படத்தின் விளம்பரத்திற்காக சென்னை பிளாசா தியேட்டரில் 40 அடி கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டது. அந்த கட் அவுட்டில் வைப்பதற்காக ரஜினிகாந்தின் சில புகைப்படங்களை ஸ்டில்ஸ் ரவி கொடுத்தார். அந்த புகைப்படங்களில் ரஜினி துப்பாக்கியுடன் இருப்பது போல ஒன்றும், சாட்டையுடன் இருப்பது போன்ற ஒன்றும் மற்றொன்றில் ரஜினிகாந்த் தனது தோளில் இருக்கும் பாம்புக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படமும் இருந்தது. 


 



அது சற்று வித்தியாசமாக இருந்ததால் வழக்கமாக 60 X 80 அளவிலான போஸ்டர்களுக்கு பதிலாக 60 X 120 அளவு கொண்ட போஸ்டர்களை அறிமுகப்படுத்தினார் கலைப்புலி.எஸ்.தாணு. அந்த போஸ்டரில் "பைரவியில் சூப்பர் ஸ்டார் ரஜினி" என பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. 


தாணுவின் விருப்பம் : 


வியாபாரத்தை காட்டிலும் இப்படம் மூலம் தனக்கான ஒரு பெயரை உருவாக்க வேண்டும் என்பதே தாணுவின் விருப்பமாக இருந்தது. இதன் மூலம் தாணு என்ற ஒருவனை மக்களின் கவனத்திற்கு கொண்டு வரவே அவர் ஆசைப்பட்டார். 


ஹவுஸ்ஃபுல் காட்சிகள் : 


பைரவி படம் திரையிடப்பட்ட ஒவ்வொரு திரையரங்கிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பின. மக்களின் ஆதரவு பைரவி படத்திற்கு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஒட்டு மொத்த படக்குழுவும் திரையரங்குக்கு சென்று பார்த்தனர். அடுத்த நாளே ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என மக்கள் உறுதிப்படுத்தினர். அந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக பைரவி திரைப்படம் அமைந்து. நடிகர் ரஜினிகாந்த் ஒரு கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் பைரவி என்பது குறிப்பிடத்தக்கது. 


 


ALSO READ | Rajnikanth: பாபா படத்தின் தோல்வியை ரஜினி எப்படி சமாளித்தார் தெரியுமா? சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான்யா!