ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் 600 கோடிகளுக்கு மேலாக வசூல் செய்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வசூல் ஓட்டத்தில் என்றைக்கும் தான் தான் டாப் என்று நிரூபித்துள்ளார் ரஜினிகாந்த். 


அதிகம் வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. சிறிது காலம் இரண்டாம் இடத்தைப் பிடித்து வைத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தை விஜயின் லியோ படம் பின்னுக்குத் தள்ளியது. தற்போது தலைவர் 170 மற்றும் 171 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த இரண்டு படங்கள் நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸின் புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள். 


தோல்வியை சந்தித்த ரஜினிப் படங்கள்


ரஜினிகாந்த் என்கிற ஒற்றை  நடிகருக்காக  நாடு கடந்து ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகிறார்கள். ரஜினிகாந்த் என்கிற ஒரு நடிகரை நம்பி கோடிக்கணக்கான பணம் ஒரு படத்திற்கு செலவிடப் படுகிறது. இந்தப் படங்கள் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அதனை ஈடு செய்யும் பொறுப்பும் முழுக்க முழ்க்க ரஜினிகாந்தையே சேரும் . இந்த மாதிரியான நேரங்களில் ரஜினிகாந்த் நிலைமையை கையாண்ட விதம் பலருக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றன.


ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த்  நடித்த 2.0 படத்தின் இசை வெளியீட்டின் போது இந்தப் படத்தில் நடித்த அக்‌ஷய் குமார் ரஜினியைப் பற்றிய சுவாரஸ்யமான ஒரு நிகழ்வை மேடையில் பேசினார்.  தான் சிறிய வயதில் இருந்தே ரஜினியைப் பார்த்து வருகிறார் என்றும் பாபா திரைப்படம் வெளியாகி அந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்று அவர் தெரிவித்தார். பாபா படத்தின் தோல்வியால்  நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பி கொடுத்தார் என்றும்,  இந்த நிலைமையை ரஜினிகாந்த் எதிர்கொண்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.  


தலைவர் 170


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த. செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அமிதாம் பச்சன், ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங், துஷாரா , மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


தலைவர் 171


இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சில காட்சிகள் ஐமேக்ஸின் படம்பிடிக்கப்பட இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


மேலும் இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.