''தமிழ் சினிமாவில் டாப் மியூசிக் டைரக்டர்ஸ் லிஸ்ட்டில் இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. இவருடைய பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு கஷ்டத்திலும், மகிழ்ச்சியிலும் ஃபேவரைட். தற்போது அஜித்தின் 'வலிமை' படத்தின் கம்போஸிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் யுவன். இந்நிலையில் இவர் ட்விட்டரில் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக யுவன் ட்விட்டரில் ”அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்” என்ற குர்-ஆன் வசனம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் சிலர் தங்களுடைய பதில்களை  கோபமாக பதிவிட்டிருந்தனர். 


 



முக்கியமாக யுவனின் ரசிகர் ஒருவர், ”யுவன் ஷங்கர் ராஜாவாக உங்களை ரசிக்கிறேன். இது, மதத்தைப் பரப்புவதற்கான தளமல்ல. இது தொடர்ந்தால் உங்கல் பக்கத்திலிருந்து விலகி விடுவேன்'' எனக் கூற, அதற்கு ஒரே வார்த்தையில் 'leave' என்று பதில் சொல்லியிருந்தார் யுவன். மற்றொருவர் உங்கள் பெயரை மாற்றுங்கள் என்று சொன்னபோது, ”நான் இந்தியன், நான் தமிழன், நான் முஸ்லிம். முஸ்லிம்கள் அரேபியாவில் மட்டும்தான் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் வெறுப்பை காட்டுகிறது. மத நம்பிக்கை என்பது வேற, தேசியம் வேறு, வெறுப்பை விதைக்காதீர்கள் சகோதரா” என்று யுவன் பதில் சொல்லியிருந்தார். இந்நிலையில் யுவனுக்கு ஆதராகவும் சில பதிவுகள் வந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் யுவனின் நெருங்கிய சிலரிடம் பேசியபோது,


''யுவனின் திருமணமே காதல் திருமணம் கிடையாது. எப்போவும் அம்மாவின் செல்லப் பிள்ளையான யுவன், அம்மாவின் மறைவுக்கு பிறகு துயரத்தில் இருந்து மீள கஷ்டப்பட்டார். அப்போது, ”உடலிருந்து உயிர் பிரிஞ்சதுக்கு பிறகு எங்கே போகுதுன்னு” என்கிற  கேள்வி யுவன் கிட்ட எழுந்திருக்க, இதுக்கு பதில் கிடைக்காமல் தனிமையில் இருந்த நேரத்துல யுவனின் நண்பர் ஒருவர் உம்ரா செய்து விட்டு யுவனை சந்தித்து இருக்கிறார். அப்போது, யுவனுக்கு பரிசாக குர்-ஆனை கொடுத்திருக்கிறார். எப்போதும் டிராவலிங் நேரத்தில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் யுவன் குரானை படிக்க தொடங்கியிருக்கிறார். அப்போது இஸ்லாம் பிடித்துப்போகவே ஆறு மாதம் வரைக்கும் இஸ்லாம் தொடர்பாக தன்னுடைய லைஃப் ஸ்டைலில் பிராக்டீஸ் செய்திருக்கிறார் யுவன். இதற்கு பின்பே இவருடைய மனைவி  ஜப்ரூன் நிஷாவை (zafroon nisa) பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார் யுவன். முதலில் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறித்து கவலை அடைந்த இளையராஜா பின்பு சரியாகிவிட்டார்” என்றனர். குறிப்பாக, இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆடியோவை கேட்பதில் நேரம் செலவழிக்கும் யுவன் தற்போது ரமலான் மாதம் என்பதால் நோன்பு வைத்திருக்கிறாராம். லாக்டவுன் காரணமாக பள்ளிவாசல்கள் எல்லாமே மூடியிருக்கும் நிலையில் தன்னுடைய மியூசிக் அலுவலகத்தில் இதுகான தனியறையை ஒதுக்கியிருக்கிறாராம்'' 



''கடந்த ரம்ஜானின்போது பெருநாள் தொழுகையை இவரே முன்னிற்று நடத்தியும் முடித்திருக்கிறார் யுவன். எப்போவும் ரம்ஜானை சென்னையில் கொண்டாடுவதுதான் யுவனின் ஸ்டைலாம். கடந்த ரமலான் நோன்பு போது 'யா நபி' எனும் பாடலையும் பாடி வெளியிட்டிருந்தார் யுவன்''. என்றவரிடம் யுவனின் ட்விட்டர் ஐடியின் அட்மின் யார்னு கேட்டால், 'யுவனுடைய சமூகவலைதள பக்கத்தை யுவனின் மனைவிதான் ஹேண்டில் செய்கிறார். ஆனா, யுவனின் பதிவுகள் மற்றும் ரிப்ளைஸ் எதுவும் யுவனின் பார்வைக்கு போகாமல் வராது” என்றனர்.