தமிழ் சினிமாவை காலம் காலமாக சில நடிகர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை கோலோச்சி வருகின்றனர். எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் என இந்த வரிசையில் அடுத்த சில ஆண்டுகளில்  யார் அந்த இடம் பிடிக்க போகிறார்கள் என மிக பெரிய விவாதம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 


அடுத்த விஜய் - அஜித் யார்?


தற்போது நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு முழுமையாக அரசியலில் இறங்கியதும் படங்களில் நடிப்பதில் இருந்து விலகுகிறேன் என கூறியது திரை ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரின் இடத்தை பிடிக்க போகும் அடுத்த நடிகர் யார் என கேள்விகள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் 2030ம் ஆண்டை ஆளப்போகும் கோலிவுட் நடிகர் யாராக இருப்பார் என்பது பற்றிய சிறு தொகுப்பு.


 



 


கவின் :


சின்னத்திரை மூலம் அறிமுகமாகி மெல்ல மெல்ல வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த கவினுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு கவின் பப்ளிசிட்டி லெவல் வேற இடத்திற்கு உயர்ந்தது. 'லிஃப்ட்' படம் மூலம் ஹீரோவான கவின் அதை தெடர்ந்து 'டாடா' படம் மூலம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது கிஸ், ஸ்டார்  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 


 



மணிகண்டன் :


கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகர் மணிகண்டன், வெள்ளித்திரையில் சிறு கேரக்டர் ரோல்களில் நடித்ததன் மூலம் பரிச்சயமானார். காலா, சில்லு கருப்பட்டி, விக்ரம் வேதா,  ஏலே உள்ளிட்ட படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் கவர்ந்த மணிகண்டனுக்கு மிகப்பெரிய ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது 'ஜெய்பீம்' திரைப்படம்.


அதில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அடுத்ததாக அவர் நடித்த 'குட் நைட்' திரைப்படம் அவரின் முழு திறமையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. நடிப்பை தாண்டி சில படங்களுக்கு  திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வரும் மணிகண்டனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் வெளியான அவரின் 'லவ்வர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்தால் அடுத்த அஜித் விஜய் இவர்களாக கூட இருக்கலாம் என பொதுவான பேச்சுக்கள் அடிபடுகின்றன. 


 



அசோக் செல்வன் :


மேலும் இன்றைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக  இருந்து வரும் நடிகர் அசோக் செல்வன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் நேர்த்தியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதால் எதிர்காலத்தில் அவர் நடிகர் விக்ரம் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 


 



பிரதீப் ரங்கநாதன் :


'கோமாளி' திரைப்படம் மூலம் ஒரு இயக்குநராக பிரபலமான பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய 'லவ் டுடே' படத்தின் மூலம் நடிகராகவும் பரிணாமம் எடுத்தார். நடிப்பில் அது அவருடைய முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இன்றைய இளைஞர்களின் இதயங்களை வென்றார். இயக்குநர் பிளஸ் நடிகராக கலக்கும் பிரதீப் ரங்கநாதன் சரியான ட்ராக்கில் பயணித்தால் நிச்சயம் அவர் எஸ்.ஜே. சூர்யா போல வருவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 


 



ஹரிஷ் கல்யாண் :


2010ம் ஆண்டு 'சிந்து சமவெளி' திரைப்படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் முதல் படமே சர்ச்சைகளை சந்தித்ததால் அவரின் ஆரம்பமே சொதப்பலாக போனது. பின்னர் அவருக்கு வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அவரின் கேரியர் கிராஃப்பையே ஒட்டுமொத்தமாக மாற்றியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு, ஓ மணப்பெண்ணே, லெட்ஸ் கெட் மேரீட் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து தன்னுடைய பெயரை தக்க வைத்து வருகிறார். தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்தால் நடிகர் சூர்யா போல ஒரு ஸ்டார் நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்கலாம்.