கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் மற்றும் கிரெட்டா கெர்விக் இயக்கியிருக்கும் பார்பீ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை 21 ஜூலை வெளியாக இருக்கின்றன. இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் எந்தப் படம் அதிக வசூல் ஈட்டும் என்கிற போட்டி நடந்து வருகிறது.


ஓப்பன்ஹைமருக்கு சவால் விடும் பார்பீ


நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹெய்மர் படம் முழுக்க முழுக்க ஐமேக்ஸில் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கப்பட்ட படம் என்பதனால், பார்பீ படத்தை விட குறைவான திரையரங்குகளே படத்துக்கு கிடைத்துள்ளன. மேலும் அமெரிக்காவில் மொத்தம் 4,200 திரையரங்குகளில் வெளியாகிறகு பார்பீ திரைப்படம். அதைவிட 600 திரையரங்குகள் குறைவாக 3600 திரையரங்குகளில் வெளியாகிறது ஓப்பன்ஹெய்மர்.


எவ்வளவு வசூல் செய்யும்


ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் அமெரிக்காவில் 50 மில்லியன் டாலர்களையும், உலகம் முழுவதும் 100 மில்லியன் டாலர்களையும் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பார்பீ திரைப்படம் மொத்தம் 140 மில்லியன் டாலர்கள் வசூல் ஈட்டும் என சினிமா ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இந்த யூகம் நிஜமானால் ஹாலிவுட்டில் ஒரு பெண் இயக்குநர் இயக்கிய படத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக பார்பீ இருக்கும் என  நம்பப்படுகிறது. முன்னதாக இந்த சாதனையைச் செய்தது கால் கடோட் நடித்த வொண்டர் வுமன் படம். இந்தப் படம் 103 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தது.


படத்தின் நீளம் காரணமாகுமா


ஓப்பன்ஹெய்மர் படத்தின் மற்றொரு பின்னடைவாக படத்தின் நீளம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 3 மணி நேரம் இருப்பதனால் குறைவான காட்சிகளே ஒரு நாளில் திரையிட முடியும் என்பதால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஓப்பன்ஹெய்மர்


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான கிறிஸ்டோஃப்ர் நோலன், அணு ஆயுதத்தை முதன்முதலில்  கண்டுபிடித்தவரான ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஓப்பன்ஹெய்மராக கிலியன் மர்ஃபி நடித்து இருக்கிறார்.


கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் கிலியன் மர்ஃபி முதல் முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார். சின்காப்பி இன்க் மற்றும் அட்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களின் சார்பில் நோலன், அவரின் மனைவி எம்மா தாமஸ் மற்றும் சார்லஸ் ரோவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. புலிட்சர் விருது பெற்ற American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer எனும் புத்தகத்தை தழுவி இப்படம் உருவாகி வருகிறது.


பார்பீ


குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரம் மற்றும் பொம்மை பார்பி. பார்பீயின் உலகத்தை படமாக்கியுள்ளார் ஹாலிவுட் இயக்குநர் கிரெட்டா கர்விக். ரயன் காஸ்லிங் மற்றும் மார்காட் ராபீ ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தை மிக வண்ணமயமான ஒரு படமாக எடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் கிரெட்டா கெர்விக். ஹாலிவுட்டில் பெண்களின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்யும் இயக்குநர்களில் முக்கியமானவர் கிரெட்டா கெர்விக். இவர் இயக்கிய பிரான்சிஸ் ஹா இன்றுவரை ஆண் பெண் இரு தரப்பினராலும் சிலாகிக்கப்படும் திரைப்படம். மேலும்  லுயி மே ஆல்காட் எழுதிய லிட்டில் வுமன் என்கிற நாவலை தனது பார்வையில் புதிய கண்ணோட்டத்தில் இயக்கியிருப்பார் க்ரெட்டா.