ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். 'துப்பாக்கி யார் கையில இருந்தாலும் வில்லன் நான் தாண்டா" என வில்லன் வித்யுத் ஜம்வால் பேசும் வசனம் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்துள்ளது. அதேபோல் சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் அவதாரம் , அனிருத்தின் மாஸ் இசை என ஏ.ஆர் முருகதாஸ் கம்பேக் கொடுக்க சரியான படமாக அமையும் என எதிர்பார்க்கலாம். மதராஸி பட டிரெய்லரில்  சிவகார்த்திகேயனின் கேரக்டர் பற்றியும் சின்ன தகவலை படக்குழு வெளியிட்டுள்ளார்கள் 

சிவகார்த்திகேயன் கேரக்டருக்கு இப்படி ஒரு பாதிப்பா!

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள கேரக்டர் பற்றிய ஐடியாவை ஷாருக் கானிடம் 8 ஆண்டுகள் முன்னதாக சொன்னதாக இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்திருந்தார். படத்தின் டிரெய்லரில் சிவகார்த்திகேயனுக்கு மூளையில் பாதிப்பு இருப்பதாக வசனம் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தான் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் விவாதித்து வருகிறார்கள். 

துப்பாக்கி படத்தில் சஞ்சய் ராம்சாமிக்கு ஷார்ட் டர்ம் மெமரி லாஸ் இருப்பது போல் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பாதிப்பு இருக்கிறது. டிரெய்லரில் உள்ள சில காட்சிகளை வைத்து அது எந்த மாதிரியான பாதிப்பாக இருக்கலாம் என சில காரணங்களை யூகிக்கலாம். சிவகார்த்திகேயனின் மற்ற படங்களை விட அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக மதராஸி உருவாகியுள்ளது. பல காட்சிகளில் ரத்தம் காட்டப்படுகிறது. இதனால் ரத்தத்தைப் பார்த்தால் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் தனது கட்டுப்பாட்டை இழந்துவிடுவதாகவோ அல்லது எதுவும் செய்யாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுபவராகவோ இருக்கலாம். சிறிய வயதில் பார்த்த நிகழ்வு ஒன்றால் இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். 

' எல்லாரையும் உன் குடும்பமா நினைப்பதை தான் எல்லா மதமும் சொல்லுது' என டிரெய்லரின் தொடக்கத்தில் வருகிறது. இனம் , அல்லது மத பிரச்சனையால் தனக்கு நெருக்கமானவர்களை அவர் இழந்ததால் இந்த பாதிப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்" . இது தவிர்த்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல விதங்களில் இந்த டிரெய்லரை டீகோட் செய்து வருகிறார்கள். எல்லா கணிப்புகளையும் மீறி ஏ.ஆர் முருகதாஸ் ரசிகர்களுக்கு சூப்பரான சர்பிரைஸ் வைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.