Amit Shah PM CM Bill: கருப்பு மசோதா என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை, உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
”பிரதமர் பதவியை தாமாகவே சேர்த்த மோடி”
அரசியலமைப்பு சட்டத்தின் 130வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதாவை எதிர்க்கும், எதிர்க்கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். சிறை செல்லும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதாவில் பிரதமர் பதவியை மோடி தாமாகவே சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி தாமாகவே தமது பதவியையும் இந்த மசோதாவில் சேர்த்துள்ளார். முன்னதாக குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரை நீதுத்துறை விசாரணையின் கீழ் கொண்டு வருவதை தடுக்கும் 39வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை இந்திரா காந்தி கொண்டு வந்தார். ஆனால், நரேந்திர மோடி தான் வகிக்கும் பதவிக்கு எதிராகவே அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதன் மூலம், பிரதமர் தீவிர குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைக்கு சென்றால், அவர் தனது பதவியை இழக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா அட்டாக்:
எதிர்க்கட்சிகளின் கருப்பு மசோதா என்ற விமர்சனத்தை தாமும் பாஜகவும் முற்றிலுமாக நிராகரிப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, “ நான் ஒட்டுமொத்த நாட்டையும் எதிர்க்கட்சியையும் கேட்க விரும்புகிறேன். முதலமைச்சர், பிரதமர் அல்லது வேறு எந்தத் தலைவரும் சிறையில் இருந்து நாட்டை நிர்வகிக்க முடியுமா? அது நமது ஜனநாயகத்தின் கண்ணியத்திற்கு ஏற்றதா? இன்றும் கூட, அவர்கள் எப்போதாவது சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தால், சிறையில் இருந்தே அரசாங்கத்தை எளிதாக அமைப்பார்கள் என்று முயற்சி செய்கிறார்கள். சிறை முதலமைச்சரின் இல்லமாகவும், பிரதமர் இல்லமாகவும் மாற்றப்படும், மேலும் டிஜிபி, தலைமைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர் அல்லது உள்துறைச் செயலாளர் சிறையில் இருந்து உத்தரவுகளைப் பெறுவார்கள்.
இந்த நாட்டை சிறையில் அமர்ந்திருப்பவர் இல்லாமல் ஆள முடியாது என்ற கருத்தை நானும் எனது கட்சியும் முற்றிலும் நிராகரிக்கிறோம். இது நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ யாருடைய பெரும்பான்மையையும் பாதிக்காது. ஒரு உறுப்பினர் பதவி விலகுவார், கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை நடத்துவார்கள், அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததும், அவர்கள் மீண்டும் வந்து சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளலாம். இதில் என்ன ஆட்சேபனை?” என அமித் ஷா விளக்கமளித்துள்ளார்.
”தாக்கல் கூட செய்யக்கூடாதா?”
தொடர்ந்து பேசுகையில், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும்போது, போராட்டம் அனுமதிக்கப்படுகிறது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். இந்தத் திருத்தம் இரு அவைகளின் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படும் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அனைவரும் அங்கு தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். வாக்களிப்பின் போது, நீங்கள் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இது ஒரு அரசியலமைப்புத் திருத்தம் என்பதால், இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஆனால், ஜனநாயகத்தில் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கூட அனுமதிக்காதது பொருத்தமானதா? இரு அவைகளும் விவாதத்திற்கானதா அல்லது வெறும் சத்தம் மற்றும் இடையூறுக்கானதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நிறைவேற வாய்ப்பில்லாத மசோதா..
அமித் ஷா சொன்னது போல அரசியலமைப்பு திருத்த மசோதா என்பதால், இதனை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதாவது மக்களவையில் 364 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 164 உறுப்பினர்களும் மசோதாவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், இரண்டு அவைகளிலும் பாஜக கூட்டணிக்கு அந்த வலிமை இல்லாததால் இந்த மசோதா நிறைவேற்றப்பட இப்போதைக்கு வாய்பில்லை என்பதே களநிலவரமாகும். இதனிடையே, நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிந்தே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி சுமத்திய வாக்கு திருட்டு குற்றசாட்டை மழுங்கச் செய்யவே, இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.