”அந்த காலத்துல” என்று ஒருவர் கதை சொல்லத் தொடங்கினால்  உங்களது முகத்தில் இருக்கும் சலிப்பு புரிந்துகொள்ளக்கூடியதுதான்.ஆனால் அந்த காலத்துல நிஜமாகவே ஒரு சுவாரஸ்யமான கதை இருந்தது. என்ன தெரியுமா? இந்தக் கதையின் பேர் ஒன்ஸ் மோர் கல்ச்சர்.


அதாவது ஒரு படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் . உதாரணத்திற்கு கில்லி படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடல் மிகப் பிரபலமானது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை பார்க்க வந்தக் கூட்டம் எக்கச்சக்கம். அப்படிப்போடு பாடல் வருகிறது ரசிகர்கள் எழுந்து குதித்து ஆடி கொண்டாடுகிறார்கள். ஆனால் திரும்பிப் பார்ப்பதற்குள் பாடல் முடிந்துவிடுகிறது. இப்போது கூட்டத்தில் இருந்து “ஆப்பரேட்டர் ஒன்ஸ் மோர்” என்று ஒரு குரல் கத்தும். இந்தக் குரலைத் தொடர்ந்து இன்னும் சில குரல்கள் ஒன்ஸ் மோர் என்று கத்தத் தொடங்கும். அப்படிப்போடு பாடல் மறுபடியும் ஒரு முறை ரீவைண்ட் செய்து போடப்படும். ரசிகர்கள் பயங்கர வெறியாக இருந்தால் இன்னும் ஒருமுறை கூட போடப்படும்.


இப்பொழுது பாடல் ரீவைண்ட் செய்து மீண்டும் போடப்படும் என்று சொன்னதும் நீங்கள் ஒரு வீடியோவை செல்ஃபோனில் அல்லது டிவியில் நாம் ரீவைண்ட் செய்வதுபோல் கற்பனை செய்திருக்கலாம் அப்படி இல்லையென்றால் எப்படி கற்பனை செய்தீர்கள். திரையரங்கில் இருந்து அப்படியே மேலே இருக்கும் ஆப்பரேட்டர் ரூமிற்குள் நுழைவோம்.


ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது ஒரு முத்தக்காட்சி ஒன்று ஹிட் ஆகிவிட்டது என்றால் அதற்கு ஒரு ஆபரேட்டர் முன் கூட்டியே தயாராகிவிடுவார். இந்தத் தகவலை அவர் பக்கத்து ஊர்களில் இருக்கும் ஆபரேட்டர் வழியாக தெரிந்துகொள்வார். இன்று மாதிரி இல்லாமல் அன்று படம் ஓட்டுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒரு படத்தின் ரீல் பல ஆயிரம் அடிகளுக்கு மேல் இருக்கும். ஒரு முறை இந்த ரீலை மாட்டிவிட்டால் அது முடியும் வரை இடையில் நிறுத்த முடியாது. முக்கியமாக ப்ரிவியு என்று ஒன்று கிடையாது. அதாவது இந்த சீன் ரீலின் இந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை நன்றாக நிறுத்தி உற்றுப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஒன்ஸ் மோர் கேட்டால் மட்டும் எப்படி அந்த பாடலை மிகச்சரியாக ரீவைண்ட் செய்ய முடிகிறது.


இதற்கு ஆபரேட்டர் கண்டுபிடித்து யுக்தி என்னத் தெரியுமா? நிச்சயமாக பாடல் ஒன்ஸ் மோர் கேட்கப்படும் எனத் தெரிந்தால் ஆபரேட்டர் படம் தொடங்குவதற்கு முன் அந்தப் ரீலில் பாடல் உள்ள பகுதிகளில் மட்டும் ரீலுக்குப் பின்னால் ஒரு வெள்ளை டேப் ஒட்டிவைத்துக்கொள்வார்.(ரீலின் ஒரு பக்கம் மட்டுமே படம் பதிவாயிருக்கும்) கீழிருந்து “ஆபரேட்டர் ஒன்ஸ் மோர்” என்கிற குரல் வந்த உடனே ஓடிக்கொண்டிருக்கும் படத்தை அப்படியே ரிவர்ஸில் சரியாக அந்த டேப் ஒட்டப் பட்டிருக்கும் இடத்தில் நிறுத்துவார். பாடல் மீண்டும் தொடங்கும்.


இந்த வேலைகளுக்காக ஆபரேட்டருக்கு ரசிகர்கள் சார்பில் சில நேரங்களில் கொஞ்சம் காசும் சில நேரங்களில் விசில் , கைதட்டல்கள் வழங்கப்படும்.இது எதுவும் இல்லை என்றாலும் மேலிருந்து கீழே ரசிகர்கள் கொண்டாடுவதை பார்ப்பதற்காக மட்டுமேகூட ஆபரேட்டர்கள் அதை செய்திருக்கிறார்கள். இதைதான் ஒன்ஸ் மோர் கலாச்சாரம் என்கிறோம்.