தன் காதலர் யார் என விரைவில் அறிவிப்பதாக நடிகர் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஃபேஷன், வோ லம்ஹே, கேங்ஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் தொடங்கி இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் கங்கனா ரனாவத். அண்மையில் ஏ.எல்.விஜய் இயக்கி வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே பிரபல செய்தித் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்த அவர் தான் குடும்ப வாழ்வில் ஈடுபட இருப்பதாகவும் தன் காதலர் யார் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 



தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ‘எனக்கும் குடும்பம் வேண்டும், ஐந்து வருடத்தில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். ஒருவரைக் காதலித்து வருகிறேன். விரைவில் அவரை அறிமுகப்படுத்துகிறேன்’ எனக் கூறியுள்ளார். தொடர் சர்ச்சைகளுக்குப் பெயர் போன கங்கனா ரனாவத்திடமிருந்து பலநாட்களுக்குப் பிறகு நல்ல செய்தி வந்திருப்பதாகக் கருத்துக் கூறி வருகின்றனர் அவரை ஃபாலோ செய்பவர்கள்.






முன்னதாக அதே பேட்டியில் காங்கிரஸ் கட்சி குறித்து அவர் கூறிய கருத்துகள் வலுத்த எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.





பிரிட்டிஷ் ஆட்சியால் இந்தியாவுக்குக் கெடுதல் ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி பிரிட்டிஷ் ஆட்சியின் நீட்சி என்றும் அதனால் இந்தியாவுக்கு உண்மையில் சுதந்திரம் கிடைத்தது 2014ல் (பிரதமர் மோடி பதவியேற்ற வருடம்) தான் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 


இதற்கு எதிராகத் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் பிரித்தி மேனன் என்பவர் கங்கனா ரனாவத் சுதந்திரப் போராட்டத்தை இழிவு செய்துவிட்டதாகப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.