சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பாடலை ஷான் ரொல்டன் தனது ஸ்டைலில் பாடியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


ஷான் ரொல்டன்


இசைஞானி இளையராஜாவை தங்களது மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டு வந்த பிற இசையமைப்பாளர்கள் எக்கசக்கம். அதில் ஒருவர் ஷான் ரோல்டன். சமீப காலங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த  இசையமைப்பாளர்களில் ஒருவர். மெலடி, ஃபோல்க், ஜாஸ் என ஒரே படத்தில் பலவகையான பாடல்களை வழங்கக் கூடியவர். சமீபத்தில் இவர் இசையமைத்த ஜெய் பீம்,  குட் நைட், லவ்வர், ஆகிய படங்கள் ஆல்பம் ஹிட் ஆகியிருக்கின்றன. தல கோதும் இளங்காத்து, நான் காலி, ஜிங்கிரதங்கா என ஷால் ரோல்டனின் பாடல்கள் வெவ்வேறு தருணங்களில் நாம் கேட்கும் பாடல்களாக மாறியுள்ளன.


இளையராஜாவை காப்பி அடிக்கிறார்


வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஷான் ரோல்டன். தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய ஜோக்கர் , முண்டாசுபட்டி, சதுரங்க வேட்டை ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்திற்கும் ஷான் ரோல்டன் இசையமைத்தார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்த்தன என்றாலும் ஷான் ரோல்டன் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது அவரது பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் பாடல்களின் நேரடி சாயலில் அமைந்திருப்பதாக கூறப்பட்டது. விமர்சனங்களாக மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் ஷான் ரோல்டனை ட்ரோல் செய்து பல்வேறு மீம்கள் உருவாக்கப் பட்டன. ஷால் ரோல்டன் இளையராஜா பற்றியும் அவரது இசை மேதைமைப் பற்றியும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பேசி வருபவர். ஆனால் அதே நேரத்தில் இந்த விமர்சனங்களைக் கடந்து தனது பாடல்கள் தனித்துவமானவை என்பதையும் அவர் தனது பாடல்களின் வழி நிரூபித்திருக்கிறார்.


பாடறியேன் படிப்பறியேன் பாடலை இப்படியும் பாடலாமா






இளையராஜாவின் இசையை ஷான் ரோல்டன் எவ்வளவு நுணுக்கமாக ரசிக்கக் கூடியவர் என்பதற்கு சான்றாக சமூக வலைதளத்தில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஷான் ரோல்டன் இளையராஜாவின் பாடல் ஒன்றை விளக்கி இருக்கும் விதம் ரசிகர்களை வியப்படையச் செய்துள்ளது. 


இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற ' பாடறியேன் படிப்பறியேன்' பாடல் ஒரு சாமானிய மனிதனுக்கான பாடலாக இருந்திருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என்று பாடிக்காட்டுகிறார் ஷால் ரோல்டன். ரொம்ப சீரியஸாக அமைந்த இந்த பாடலை ஒரு சாதாரண மனிதன் வயலில் நடந்துகொண்டே பாடும் கிராமியப்பாடலாக மாற்றிவிட்டார். பின் இந்த பாடல் அமைந்துள்ள ராகத்தைப் பற்றியும் இளையராஜா அதை பயன்படுத்தி இருக்கும் விதம், பாடகர் சித்ரா இந்த பாடலை பாடியிருக்கும் விதம் பற்றியும் அவர் விளக்கும் விதம் இசையில் அவருக்கு இருக்கும் தேர்ச்சியை காட்டுகிறது.