தி கோட் படம்:


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், கடைசியாக “லியோ” என்ற படத்தில் நடித்தார். இப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் "The Greatest of All Time" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். G.O.A.T  என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.

  


அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம், மோகன், பார்வதி நாயர், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு எனப் பலரும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். 


விறுவிறுப்பாக நடைபெறும் ஷூட்டிங்:


முன்னதாக சென்னை, தாய்லாந்து என பல இடங்களில் G.O.A.T பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் சிஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் சென்னை மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றன.  கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் சென்ற விஜய்யை ரசிகர்கள் காத்திருந்து உற்சாகமாக வரவேற்றனர்.


தொடர்ந்து, படப்பிடிப்பு தளம் மற்றும் விஜய் தங்கி உள்ள ஹோட்டல் ஆகிய இடங்களில்காத்திருந்து ரசிகர்கள் சந்தித்து வந்தனர். அதோடு விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் மாலை அணிவித்தும், ஆட்டோகிராஃப் வாங்கியும் வந்தனர். இன்றுடன் கேரளாவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அடுத்ததாக ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கு இரு வாரங்களுக்கு இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  அடுத்த இரண்டு மாதத்திற்குள் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. 


வைரல் வீடியோ:


இந்த நிலையில், கேரளா சென்றுள்ள விஜய்யின் வீடியோ கடந்த இரு தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ரசிகர்களின் ஆர்வ மிகுதியால் விஜய் பயணித்த கார் பலத்த சேதமடைந்தது. கண்ணாடி உடைந்த நிலையில் இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.






இதனைத் தொடர்ந்து, தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் நடந்துச் சென்று கொண்டிருக்கையில், அவர் மீது ரசிகர் ஒருவர் பூ மாலையை தூக்கிப் போட, அதனை விஜய் தன் கையில் பிடித்தபடி செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


முன்னதாக, திருவனந்தபுரத்தில் மைதானம் ஒன்றில் விஜய் ரசிகர்களை சந்தித்தார். அப்போது அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களைப் பார்த்து அவர் கையசைத்தார். தொடர்ந்து சேட்டா, சேச்சி எனப் பேசிய விஜய் அனைவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.