நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் வழக்கத்தை விடவும் அதிகமாகவே அனல் பறக்கும் களமாக மாறியுள்ளது. 


ஏமாற்றமே:


இந்நிலையில், அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலைச் சந்தித்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மிகவும் வருத்தமாக இதனை தெரிவித்தனர். இது உண்மையும் கூடதான். தொடக்க காலத்திலேயே கூறியிருந்தால் எங்கள் நிலைப்பாடும் மனநிலையும் மாறியிருக்கும். கடைசி நேரத்தில் அதிமுக கைவிரித்த காரணத்தால் எங்களுக்கு அது மிகவும் அதிருப்தியாக உள்ளது. அதிமுகவின் இந்த செயலினால், புரட்சி பாரதம் கட்சியினர் வருத்தத்தோடு, ஏமாற்றத்தோடு, கொந்தளிப்போடு உள்ளனர். 


கூட்டணியில் இருந்து விலகலா?


மாவட்டப் பொறுப்பாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஊடகத்தினரிடம் இது தொடர்பாக பரிமாறப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்கப்படும். அப்போது அதிமுக கூட்டணியில் தொடர்வோமா? இல்லை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோமா? இல்லை வேறு கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோமா என்பது குறித்து தெரிவிக்கப்படும். 


என்ன காரணத்தினால் எங்களுக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என தெரியவில்லை. எங்களுக்கு தொகுதி ஒதுக்கக்கூடாது என்பதன் பின்னணியில் என்ன சதி நடந்தது எனத் தெரியவில்லை. நம்பிக்கையோடு இருந்தோம், தற்போது நம்பிக்கையை இழந்திருக்கின்றோம். நிர்வாகிகள் சிலர் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிடலாம் எனத் தெரிவித்தனர். தனித்து நிற்கலாம் என சிலர் தெரிவித்தனர். சிலர் புதிய கூட்டணியில் சேர்ந்து பயணிக்கலாம் எனத் தெரிவித்தனர்” இவ்வாறு தெரிவித்தார்.