டேவிட் படிக்கல் என்கிற கற்பனை நடிகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் நடிகர். அப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.


டொவினோ தாமஸ்


மலையாள திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் டொவினோ தாமஸ். மாயாநதி , மின்னல் முரளி , தல்லுமாலா ஆகிய படங்கள் இவருக்கு வெகுஜனத் திரையில் கவனம் பெற்றுத்தந்த படங்களாக அமைந்தன. தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக அறிமுகமானார் டொவினோ தாமஸ். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 2018 படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றதுடன் பலவிருதுகளை வென்று பாக்ஸ் ஆஃபீஸிலும் சாதனை படைத்தது. இந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடித்து வெளியான அன்வேஷிப்பின் கண்டேதும் படமும் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்றது. மின்னல் முரளி 2 , த்ரிஷாவுடன் ஐடண்டிடி என பல்வேறு படங்களில் நடித்து வரும் டொவினோ தாமஸ் தற்போது நடித்துள்ள படம் நடிகர்.


நடிகர்


 மலையாளத்தில் ’டிரைவிங் லைசன்ஸ்’ மற்றும் ’ஹனி பீ ‘ ஆகிய படங்களை இயக்கிய லால் ஜூனியர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நடிகர் படத்தில் டொவினோ தாமஸ் , ரோமான்ச்சம் , மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் செளபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். வீணா நந்தகுமார், தியான் ஸ்ரீனிவாசன், அனூப் மேனன், ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, லால் மற்றும் மதுபால் ஆகியவர்கள் இப்படத்தில் பிற கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்கள். மலையாள சூப்பர்ஸ்டாராக இருக்கும் டேவிட் படிக்கல்லின் என்கிற கற்பனை கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 


இப்படத்திற்கு முதலில் நடிகர் திலகம் என்று பெயர் வைக்கப் பட்டிருந்தது. நடிகர் திலகம் என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் தான். இந்த பட்டத்தின் மேல் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய செண்டிமெண்ட் இருப்பதால் படத்தின் பெயரை மாற்றச் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு படக்குழுவுக்கு வேண்டுகோள் வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் திலகம் என்கிற டைட்டிலை நடிகர் என்று மாற்றியது படக்குழு. கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகளில் உள்ளது. இப்படியான நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


நடிகர் டீசர்






மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி இந்தப் படத்தை டிரைலரை வெளியிட்டுள்ளார்.  மிகப்பெரிய ஸ்டாராக இருந்து டேவிட் படிக்கல் புகழின் உச்சத்திற்கு சென்று பின் தனது பழக்கவழக்கங்களால் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்திப்பதை இந்த ட்ரெய்லர் சுருக்கமாக காட்டுகிறது.